என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 82 பேர் கைது
புதுக்கோட்டை:
கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது தாக்கி வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு இரண்டு வாரம் தொடர் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் மது பிரியர்கள அல்லாடி வருகிறார்கள். இதனை பயன்படுத்தி விஷமிகள் சிலர் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சியது தொடர்பாக இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாராய ஊறல்கள் காட்டு பகுதியில் போடப்படுவதால் ஊறலில் விஷப்பூச்சிகள் விழுவதாலோ, ஊறலில் கலவையின் தன்மை மாறும் போதோ உயிரிழப்புகள் ஏற்பட பெரிதும் வாய்ப்புள்ளது. சாராய ஊறல் போடுவதற்காக தங்களது காலியிடத்தினையோ அல்லது தோட்டத்தினையோ பயன்படுத்த அனுமதிக்கும் சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீதும் கடும் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க தாமாக முன்வர வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் எனவும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
எந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காவல் துறையினருக்கு தெரிந்தே செயல்பட்டால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் காவல் துறைக்கு தெரியாமல் நடைபெறும் பட்சத்தில் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். தங்கள் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை இந்த மாதிரியான ஊரடங்கு காலத்தில் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றார்.
அதுபோல் டாஸ்மாக் மது பானங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வது குறித்து தகுந்த விவரங்கள் தரப்பட்டால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் தரப்பில் பாலம் என்ற வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுதிலிருந்து அனைத்து தரப்பிலும் மக்கள் இணைந்துள்ளனர். அவர்கள் கூறும் புகார் களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை முற்றிலும் அகற்ற தேவையான கருத்துகளையும் கேட்டறிந்து செயல்படுகிறோம் என்றார்.






