search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாத்தூர் தொகுதியில் பண பட்டுவாடா செய்த அதிமுக பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது

    தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    விருதுநகர்:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் முடிவடைய உள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக சாத்தூர் பறக்கும்படை அதிகாரி பாண்டி சங்கர் ராஜிக்கு தகவல் கிடைத்தது.

    அவரது தலைமையில் பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகரான வெள்ளதாய் (வயது28), ராஜ்குமார் (35), ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த தொகையை சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் கொடுத்ததாக பிடிபட்ட இருவரும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளத்தாய், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நரிக்குடி அருகே உள்ள கம்பாளி பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர். அவர்களை கண்டதும் சாலையில் நடந்து சென்ற வாலிபர் தான் கையில் வைத்திருந்த பையை சாலை யில் வீசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.

    அந்த பையை பறக்கும் படையினர் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில், ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது. அதனை திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

    பணத்தை வீசிசென்ற வாலிபர் யார்? அவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு சென்றாரா? என்பது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×