search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையதளம் மூலம் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை ரங்கசாமி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
    X
    இணையதளம் மூலம் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை ரங்கசாமி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?- ரங்கசாமி பேட்டி

    முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து ரங்கசாமி பேட்டி அளித்தார்.
    புதுச்சேரி:

    என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டையை இணையதளம் வழியாக பெறுவதற்கான நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    புதிய இணையதளத்தை என்.ஆர்.காங்கிரஸ் நிறுவன தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதலாவதாக அவரது பெயர் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதன்பின் நிருபர்களிடம் ரங்கசாமி கூறுகையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. புதுவையில் தற்போது சாலைகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளன.

    எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதை அரசின் கவனத்துக்கு பத்திரிகைகள் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், பா.ஜ.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடருகிறதா? கூட்டணிக்கு தலைமை யார்? முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? பா.ஜ.க.வில் நமச்சிவாயம் சேருகிறாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த ரங்கசாமி, நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் தொடருகிறோம். வருகிற 31-ந்தேதி புதுச்சேரிக்கு வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசுவேன்.

    முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முதலில் பா.ஜ.க.வில் சேரட்டும். யார் கூட்டணிக்கு தலைமை என்பதெல்லாம் பேச்சுவார்த்தையின்போது தெரியவரும் என்று குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நமச்சிவாயம் பா.ஜ.க.வில் இணைய டெல்லி சென்ற நிலையில், கூட்டணி தலைமை குறித்து ரங்கசாமி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 3 முறை முதல்-அமைச்சர் பதவி வகித்துள்ள ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை விட்டுத் தரமாட்டார் என்று அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
    அமைச்சர் நமச்சிவாயம்.
    அதேநேரத்தில் நமச்சிவாயத்தையே முதல்-அமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க. தலைமை அறிவிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இத்தகைய சூழலில் தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் ரங்கசாமி கூட்டணி குறித்த முடிவினை மறுபரிசீலனை செய்ய தயங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×