search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - முத்தரசன்

    விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஸ்ரீமுஷ்ணத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பால் அமைச்சர் துரைக்கண்ணு, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட பலரும் இறந்து உள்ளனர். இந்நோயால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் 3 நாட்களில் சரியாகிவிடும் என்றார். ஆனால் இதுவரை கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கதையாகி வருவது கவலை அளிக்கிறது. ஊசி, மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று பிரதமரும், முதல்-அமைச்சரும் கூறுவது கேலிக்கூத்தானது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதை திரும்ப பெற வேண்டும்.

    மனுதர்மத்தில் பெண்களையும், சூத்திரர்களையும் குறித்து தரம் தாழ்ந்த கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதனை ஆதாரங்களோடு நிரூபிக்கவும், அது பற்றி பொது மேடைகளில் விவாதிக்கவும் கம்யூனிஸ்டு கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் மனுதர்மம் பற்றி பேசக் கூடாது என்று போலீசார் மூலம் அச்சுறுத்தி, திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மனுநீதி நூலை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    Next Story
    ×