search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம்பெறவில்லை- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

    மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம்பெறாதது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய 16 உறுப்பினர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில், இதில் தமிழர்கள் யாரும் இல்லை என்பது தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-

    “தமிழர்களின் கலாச்சாரம் மிகத் தொன்மை வாய்ந்தது. இந்தியாவின் மிகவும் மூத்த மொழியாகத் தமிழ் செம்மொழி இருக்கிறது. ஆனால் 12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்று ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, அதில் ஒரு தமிழறிஞரைக் கூட இடம்பெறச் செய்யவில்லை.

    நாட்டின் பன்முக அடையாளத்தையும், பண்டையத் தமிழ் நாகரிகத்தையும் அவமதிக்கும் எண்ணத்துடன், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில், 6 பேர் சமஸ்கிருத மொழியில் புலமைத்துவம் பெற்றவர்கள் என்பது, "தமிழ்மொழி" மீது மத்திய அரசுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது.

    கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவிற்கு, -23.9 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்து விட்ட நிலையில் கூட, வேத கால நாகரிகத்தை எப்படியாவது தனது பெரும்பான்மையைக் கொண்டு, திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

    தற்போது அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடியாக மாற்றி அமைத்து, "தமிழ்நாடு, தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள்" பங்கேற்கும் வகையில், புதிய குழுவினை நேர்மையான முறையில் நடுநிலையோடு, உடனடியாக நியமித்திட, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்குப் பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×