search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

    இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

    * சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டிய மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் இப்பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

    * மாநில சுயாட்சி, இருமொழி கொள்கை, மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் உறுதியளித்த உரிமைகளை காத்தல், எல்லோரும் பயன்பெறும் கல்விமுறை என்பனவற்றில், அ.தி.மு.க., அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பயணித்த பாதையிலேயே என்றென்றும் பயணிக்கும் என்பதை இப்பொதுக்குழு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறது.

    * தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழகம் தொழில் துறையில் சிறந்த வளர்ச்சி பெற்றிடவும், அதன் மூலம் தமிழக இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தையும் இப்பொதுக்குழு வெகுவாக பாராட்டி மகிழ்கிறது.

    * தமிழ்நாடு நாள் அறிவிப்புக்கும், அதனை சிறப்பாக கொண்டாடியமைக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறது.

    * இலங்கையில் வாழும் தமிழர்களின் துன்பங்கள் நீங்கி, அவர்களின் உரிமைகளும், உடைமைகளும் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் சம உரிமை பெற்ற குடிமக்களாக அங்கு வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

    * கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு, சங்ககால தமிழர்களின் வாழ்க்கை சிறப்பை உலகறிய செய்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கும், கீழடியில் பெறப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை காட்சிப்படுத்திட புதிய அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

    * தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மேலும், தமிழக அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு போதுமான நிதி உதவியையும், அ.தி.மு.க. அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள பெரும் தொகையையும் விரைந்து வழங்க மத்திய அரசுக்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

    * ஒட்டுமொத்த நிர்வாக செயல் திறமையில் சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளை பொய் பிரசாரங்கள் மூலம் மறைக்க முயற்சிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

    * கூட்டுறவு அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில், பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய பாதையில் மக்கள் தொண்டாற்ற வேண்டும். ஜெயலலிதா அமைத்து தந்த அ.தி.மு.க. அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு மனதார வாழ்த்துகிறது.

    * தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தமிழக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சித்து நடத்தி வரும் பொய் பிரசாரங்களுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டு மக்களின் பேரன்பை பெற்ற அ.தி.மு.க. ஆயிரம் காலத்து பயிராக இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளும் என்பதை இப்பொதுக்குழு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்பாய் இருந்து, அரசியல் பணியாற்றி, அ.தி.மு.க. அரசு செய்து வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அ.தி.மு.க. வெற்றி சிம்மாசனத்தில் தொடர்ந்து வீற்றிருக்க பணியாற்றுவோம் என்று இப்பொதுக்குழு சூளுரை ஏற்கிறது.

    * விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தல் தொடர்புடைய பணிகளில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அ.தி.மு.க.வும், கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களும் மகத்தான வெற்றிபெற சூளுரை ஏற்று, அயராது உழைத்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    Next Story
    ×