search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றம்?- ராஜ்பவனில் இருந்து பொருட்களை பார்சல் செய்ய உத்தரவு
    X

    புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றம்?- ராஜ்பவனில் இருந்து பொருட்களை பார்சல் செய்ய உத்தரவு

    புதுவை கவர்னர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி 2016 மே 29-ந்தேதி பதவியேற்றார்.

    கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. பதவியேற்றது முதல் கவர்னர் கிரண்பேடிக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.

    கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என நாராயணசாமி கூறினார். ஆனால், கவர்னர் இதை ஏற்க மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதிசெய்தது. இனியாவது கவர்னர் கிரண்பேடி தீர்ப்பை ஏற்று மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சரவை வலியுறுத்தியது.

    இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கவர்னர் தனது செயல்பாடுகளை குறைத்து அமைதியாக இருந்து வந்தார். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அகில இந்திய அளவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் 30-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.

    இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடிக்கு அழைப்பு வந்துள்ளது. விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பாக புதுவை மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

    அதில், புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார். இதில் தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடி விடைபெறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கவர்னர் கிரண்பேடி மாநில கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    டெல்லி புறப்பட்டு செல்லும் முன்னர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி ஊழியர்களிடம் கிரண்பேடி கூறி இருக்கிறார். எனவே, அவர் மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    கிரண்பேடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் புருஷோத்தமன் புதுவை கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Next Story
    ×