search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு அனுமதி இல்லாமல் சஞ்சய்தத் விடுதலையானார்- தகவல் அறியும் சட்டத்தில் தகவல்
    X

    மத்திய அரசு அனுமதி இல்லாமல் சஞ்சய்தத் விடுதலையானார்- தகவல் அறியும் சட்டத்தில் தகவல்

    மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே சஞ்சய்தத் விடுதலையானார் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தநிலையில் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் எரவாடா சிறை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.


    இதையடுத்து பேரறிவாளன் தரப்பினர் தகவலறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தனர். அதில் சஞ்சய்தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கி இருந்தீர்களா? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு சிறை அதிகாரிகள் அளித்த பதிலில் சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுடன் கலந்தாலோசிக்காமல் மாநில அரசே சஞ்சய் தத்தை விடுதலை செய்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

    சஞ்சய்தத் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை சிறை காலத்தில் சேர்த்துள்ளனர். அதையும் கணக்கிட்டுதான் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டுள்ளார். சஞ்சய்தத் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர்.

    சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்ததை போலவே அரசமைப்பு சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என அவரது தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×