என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே இன்று விபத்து: மரத்தில் கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த திட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சாந்தி (45).
இந்த நிலையில் லோகநாதனும், சாந்தியும் தஞ்சைக்கு பொருட்கள் வாங்குவதற்காக காரில் சென்றனர். பின்னர் தஞ்சையில் இருந்து திட்டைக்கு இன்று காலை 11.30 மணியளவில் காரில் அவர்கள் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திட்டை கோவில் அருகே கார் வந்த போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதனால் லோகநாதன், திடீரென காரில் பிரேக் போட்டார்.
இதில் அந்த பகுதி சாலையில் ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் காரில் இருந்த லோகநாதன், முன்சீட்டில் உட்கார்ந்திருந்த சாந்தி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டை பகுதியில் கடந்த ஓராண்டாகவே தார்சாலை போட ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இருந்தது. ஆனால் இதை சீர்படுத்தாமல் ரோட்டில் ஜல்லிக்கற்கள் அப்படியே இருந்தது. இதன்காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு 2 பேர் பலியானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். மேலும் ஜல்லிக்கற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.