search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK #DMDK
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.

    நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது

    ரியல் எஸ்டேட் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.

    அதைப்போல பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மக்களுக்கு இலவசம் தருவதை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது. அ.தி.மு.க. அரசு மக்கள் நல அரசு, சமூக நீதிக்கான அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 5 லட்சம் அரசு வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். அதேபோல் 3.5 லட்ச காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.

    எல்லோருக்கும் அரசு வேலை என்பது எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அதனால் பெண்கள், இளைஞர்கள் தொழில் முனைவோரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கட்டித்தருவது, பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், நெசவாளர்கள் போன்றவர்களுக்கு பல சலுகைகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. இது எல்லாம் தவறா? வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி தொகையாக 2,000 தருவது எந்தவிதத்திலும் தவறல்ல.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில் தான் தேர்தல் கூட்டணி. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார். அதனால் தான் அரசியல் நாகரீகங்களுக்கு அப்பாற்பட்டு எங்களை கண்டபடி திட்டுகிறார்.

    டி.டி.வி. தினகரன் ஒரு தனி மரம். இனி அவருடைய அரசியல் இங்கே எடுபடாது. அவர் ஒரு வெற்று காகிதம். அதைப்போல கமல்ஹாசனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த மூன்று பேருக்கும் அ.தி.மு.க. மெகா கூட்டணியை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது.

    கிராமசபை, ஊராட்சி சபை ஏன் ஐ.நா. சபை நடத்தினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தே.மு.தி.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது அந்த கட்சியினுடைய தனிப்பட்ட செயல். அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முற்றுப்பெற்றது என்று சொல்லி விட முடியாது.



    ஸ்டாலின் விஜயகாந்தை சந்திக்கும்போது அரசியலும் பேசினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இதிலிருந்து உண்மை தெரிகிறது. ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்ற எண்ணம்.

    தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. எல்லோரது கால்களிலும் விழுகிறது. இதுதான் அவர்களின் நிலைமை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பேச்சு வார்த்தை நடக்கும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூரில் உள்ள பள்ளியில் இன்று, காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை.

    மு.க.ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது தலைவனாக இருப்பதற்கு அழகல்ல.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரும் மனுவை கவர்னர் இதுவரை நிராகரிக்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி கவர்னர் முடிவு எடுக்க அரசு வலியுறுத்த முடியாது” என்றார். #MinisterJayakumar #ADMK #DMDK
    Next Story
    ×