search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் 1-ந்தேதி கூட்டணி தலைவர்களுடன் மோடி பிரசாரம்
    X

    காஞ்சிபுரத்தில் 1-ந்தேதி கூட்டணி தலைவர்களுடன் மோடி பிரசாரம்

    காஞ்சிபுரத்தில் மார்ச் 1-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசுகிறார்கள். #PMModi #ADMK #BJP
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

    மாநிலம் வாரியாக சென்று அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    கடந்த மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி அப்போது தேர்தல் பிரசார கூட்டத்திலும் பேசினார். இதைத் தொடர்ந்து இந்த மாதம் (பிப்ரவரி) தமிழ்நாட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது.

    கடந்த 10-ந்தேதி பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகம் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அன்று அவர் திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார். அன்றைய தினம் புதிய நலத்திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

    இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17-ந்தேதி மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்து பிரதமர் பிரசாரம் செய்வார் என்று தகவல்கள் வெளியானது. பிறகு கன்னியாகுமரி கூட்டம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருவது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

    மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விடுவதாக பயண திட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கூட்டத்தில் பேசி முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியை காஞ்சிபுரத்துக்கு அழைத்து வர அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாவிட்டாலும் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.


    மோடி காஞ்சிபுரம் வருவதை பா.ஜனதா மூத்த தலைவர்களில் சிலர் இன்று காலை உறுதிப்படுத்தினார்கள்.

    பிரதமர் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பொறுப்பேற்று செய்ய தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மோடி பேசும் கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.

    அதுமட்டுமின்றி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எந்தெந்த கட்சி சார்பில் யார்-யார் பேசுவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    மார்ச் 1-ந்தேதிக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டை அதற்குள் முடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இன்னும் ஓரிரு தினங்களில் அதில் முடிவு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் தெரிய வரும்.

    இதையடுத்து அ.தி.மு.க- பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த வேட்பாளர்களையும் காஞ்சிபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் மேடை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பிரதமர் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. #PMModi #ADMK #BJP
    Next Story
    ×