search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை- கவர்னர் கிரண் பேடியை மாற்ற சபாநாயகர் வேண்டுகோள்
    X

    புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை- கவர்னர் கிரண் பேடியை மாற்ற சபாநாயகர் வேண்டுகோள்

    புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கவர்னரை மாற்ற வேண்டும் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kiranbedi #PuducherryPolitical
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி தலைவர்கள் கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13-ந்தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் புதுவையில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    3 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நிர்வாகம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    புதுவை கவர்னர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சர், கவர்னருக்கு இங்கு தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.

    ஆனால் அந்த கடிதத்தை கவர்னர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாத நிலையில் முதல்-அமைச்சர் தனது சக அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கடந்த 13-ந்தேதி முதல் கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கவர்னர் மாளிகையை நோக்கி குவியத் தொடங்கினார்கள்.

    மோசமான சூழ்நிலை நிலவியதை அறிந்த நான் நேரடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தேன். மேலும் எனது கருத்துக்களையும் கூறி பத்திரிகை மூலமாக கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

    நான் இந்த பிரச்சனை சம்பந்தமாக நடுநிலையாளராக இருந்து சமரசம் செய்ய தயாராக இருக்கிறேன். பொதுமக்கள் நலன் கருதி இந்த பணியை செய்கிறேன் என்று கூறினேன்.



    தற்போது இந்த பிரச்சனை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நான் கவர்னரை சந்தித்தேன். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் உச்சகட்ட உணர்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போது மாறி இருக்கிறது.

    இந்த சூழ்நிலையிலும் கவர்னர் இதில் கவனம் எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் புதுவை மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை.

    இப்போது இதில் அடுத்த கட்டமாக ஒரு இக்கட்டான நிலை உருவாகி இருக்கிறது. இங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று கவர்னர் திடீரென மாளிகையில் இருந்து வெளியேறி சென்று விட்டார்.

    இனி 21-ந்தேதி தான் இங்கு திரும்ப இருப்பதாக நான் அறிகிறேன். ஒரு கொந்தளிப்பான நிலை மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் மாநிலத்தின் நிர்வாகியான கவர்னர் தனது கடமையை செய்ய முன்வரவில்லை. பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடிய வி‌ஷயமாக தென்படுகிறது.

    மிக முக்கிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மாநில தலைமை நிர்வாகியான கவர்னர் தனது அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்துவிட்டு வெளியேறி இருக்கிறார்.

    இப்படி மோசமான நிலை புதுவையில் நிலவிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இன்னும் மோசமான நிலையை எட்டுவதற்கு முன்பாக அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்காக நான் சில வேண்டுகோள்களை விடுக்கிறேன். புதுவை மாநிலத்திற்கு பொறுப்பாக இருக்கும் மத்திய உள்துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். இதற்காக திறமை வாய்ந்த இடைக்கால கவர்னர் ஒருவரை புதுவைக்கு நியமிக்க வேண்டும்.

    அவர் புதுவை மாநிலத்தின் இன்றைய பிரச்சனையை திறமையாக கையாண்டு தீர்க்க கூடிய வகையில் செயல்படுபவராக இருக்க வேண்டும். புதுவை மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு வைத்திலிங்கம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  #Kiranbedi #PuducherryPolitical
    Next Story
    ×