search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் முதல்-அமைச்சரான பிறகு கிராம மக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன்: முக ஸ்டாலின்
    X

    நான் முதல்-அமைச்சரான பிறகு கிராம மக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன்: முக ஸ்டாலின்

    தற்போது இருக்கும் ஆட்சியை நீக்கிவிட்டு தான் முதல்-அமைச்சரான பிறகு கிராம மக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். #DMK #MKStalin
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செட்ரப்பட்டியில் தி.மு.க. சார்பில் இன்று காலை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று பெண்கள் உள்பட பலரிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நான் இங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டேன். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தான் நிறைவேற்றினோம்.

    தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஜப்பானில் இருந்து நிதிஉதவி பெற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியமைத்தது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 40 சதவீதம்தான் தண்ணீர் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 50 சதவீதமும் தான் கொடுக்கப்பட்டது.

    தாங்கள் தான் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைத்ததாக அ.தி.மு.க.வினர்  கூறி வருகின்றனர்.

    ஆனால், இந்த செயல்முறைக்கு தீர்வு காண ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தான் செயலாற்றியது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், துணை முதல்-அமைச்சராக இருந்த நான் ஆகியோர் சேர்த்து ஜப்பான் நாட்டில் இருந்து நிதி உதவி பெற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தோம்

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதைத்தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை விடுத்தனர்.

    அரூர் அருகே உள்ள செட்டிப்பட்டி சமத்துவபுரத்தில் மயானம் அமைத்து தரவேண்டும். விவசாயிகள் கடன்களை தீர்க்க வேண்டும். இந்த பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நிதி உதவி அளிக்க வகை செய்ய வேண்டும். மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்.

    பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் சீக்கிரமாக செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, செட்ரபட்டி பகுதியில் பஸ் போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். மொரப்பூரில் தனியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும், பி.எட். படித்து முடித்தவர்களுக்கும் தகுதியான ஆசிரியர் வேலை ஒதுக்கவில்லை. ஆகையால் நீங்கள் முதல்-அமைச்சராக வந்தபிறகு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பி.எட். முடித்தவர்களுக்கும் வேலை பெற வழிவகை செய்ய வேண்டும். செட்ரப்பட்டி பகுதியில் சுமார் 75 வீடுகள் உள்ளன. அரசு மூலம் அங்கன்வாடி பள்ளிகள் அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    தற்போது இருக்கும் ஆட்சியை நீக்கிவிட்டு நான் முதல்-அமைச்சரான பிறகு நீங்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #ADMK
    Next Story
    ×