search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் - தங்க தமிழ்ச்செல்வன்
    X

    அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் - தங்க தமிழ்ச்செல்வன்

    அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilSelvan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க.வும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பாரதிய ஜனதா மேலிடமும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதுபற்றி தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும். அப்போதுதான் வர இருக்கிற தேர்தல்களில் முழு வெற்றியை பெற முடியும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்று தான் எல்லா நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான் 18 எம்.எல்.ஏ.க்களின் ‘அஜண்டாவாக இருந்தது. டி.டி.வி தினகரனின் நிபந்தனை, கூடுதலாக 4, 5 அமைச்சர்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதுதான்.


    ஆனால் எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என்கிறார்கள்.

    எனவே யார்-யார் பதவியில் இருக்க வேண்டும், யார்-யார் விலக வேண்டும் என்பதை பெருந்தன்மையுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். இரு தரப்பிலும் பேசினால் கட்சிகள் இணைவது சாத்தியம்தான்.

    ஏற்கனவே ஜெ.அணி, ஜானகி அணி என 2 பிரிவாக இருந்த போதுதான் தி.மு.க. ஜெயித்து ஆட்சியை பிடித்தது. அந்த தவறை உணர்ந்து இரு அணிகளும் பின்னர் இணைந்தது. ஆட்சியையும் பிடித்தது.

    அதே போன்ற ஒரு கால கட்டம்தான் இப்போது வந்துள்ளது. ஆளும் கட்சியிடம் உளவுப் பிரிவு உள்ளதால் யாருக்கு பலம் அதிகம் உள்ளது என்ற சர்வே இருக்கும். அதன் அடிப்படையில் பதவி கொடுக்கலாம்.

    தமிழ்நாடு முழுவதும் மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கும் ஒரே தலைவராக டி.டி.வி. தினகரன் வலம் வருகிறார். ஆனால் ஆளும் கட்சியில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற ஊர்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க முடிவதில்லை. சேலம் மாவட்டத்திலேயே அவர் 5 நாட்கள் முகாமிட்டு தங்குகிறார்.

    எனவே யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் ஆளும் கட்சிதான் விட்டு கொடுத்து வரவேண்டும்.

    கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள். 18 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இதைவிட இழப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

    அ.தி.மு.க.வில் உள்ள 10 பேர் சுய நலத்துக்காக கட்சியையும், ஆட்சியையும் இழக்க வேண்டுமா? என்பதை சிந்தியுங்கள்.

    அ.தி.மு.க. இணைந்தால் கட்சிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க. ‘அவுட்’ ஆகி விடும். இதுதான் இன்றைய நிலை.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #ThangaTamilSelvan

    Next Story
    ×