என் மலர்

  செய்திகள்

  புயல் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க முதல்வர் உத்தரவு
  X

  புயல் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க முதல்வர் உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
  சென்னை:

  வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வழியாக கரையை கடந்தது.

  மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறைக்காற்று வீசியதால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கடுமையான பேரழிவு ஏற்பட்டுள்ளது.

  லட்சக்கணக்கான தென்னை மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்தும் சேதம் அடைந்தும் மக்களை கடுமையாக பாதிப்பு அடையச் செய்துள்ளது. இதனால் நிவாரண முகாம்களிலேயே மக்கள் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.

  போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சாய்ந்து விழுந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நட்டும், நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில் சேதம் அடைந்த மின்சார வயர்களுக்கு பதில் புதிய வயர்களை மாற்றியும் மின் இணைப்பு வழங்கினார்கள். இதனால் குடிநீர் பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.

  நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.

  டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் மழையால் சேரும் சக்தியுமாக மாறியதால் தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகிறது.

  தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதமாக பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

  மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளதால் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


  பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

  புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் குடும்பங்கள் 415 முகாம்களில் தொடர்ந்து தங்கிஉள்ளனர். இவர்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

  மேலும் 6 லட்சம் குடும்பங்களுக்கு உடனடியாக மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்எண்ணை விநியோகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக குடும்பம் ஒன்றுக்கு 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படுகிறது.

  இதற்காக தற்போதைக்கு 1,075 கி.லிட்டர் மண்எண்ணை தேவைப்படுகிறது. தொடர்ந்து மண்எண்ணை விநியோகம் செய்து கூடுதலாக 1,675 கி.லிட்டர் தேவைப்படுவதால் உடனடியாக ஒதுக்கீடு செய்ய உதவுமாறு சேத பகுதிகளை பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக உணவு அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

  புயலால் சேதம் அடைந்த தென்னை மற்றும் பயிர்கள் பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சாய்ந்து விழுந்த தென்னைகளை அகற்றியதும் அந்த இடத்தில் புதிய கன்றுகளை நட தமிழக வேளாண்மைத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் போதுமான தென்னங்கன்றுகள் இல்லை என்றால் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  தற்போது புயல் பாதித்த மாவட்டங்களில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும், ஊழியர்களும் 8,000 பேர் முகாமிட்டு நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

  சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்து இங்குள்ள அலுவலக பணிகளை முடித்து விட்டு மீண்டும் நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

  இந்த வாரத்துக்குள் நிவாரணப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அமைச்சர்களை தொடர்ந்து அங்கேயே பணி முடியும் வரை தங்கியிருந்து கவனிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  இதனால் அமைச்சர்கள், அவர்களது உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் டெல்டா மாவட்டங்களிலேயே தங்கி உள்ளனர்.

  நிவாரணப் பணிகள் பற்றி மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் கூறும்போது, பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. மக்களின் அன்றாட இயல்புநிலை திரும்பி வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. என்றாலும் முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

  அடுத்த வாரம் புயல் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

  கூட்டத்தில் நிவாரண பணிகளின் முன்னேற்றம், இன்னும் மேற்கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகள், உதவிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகே அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்னை திரும்புவார்கள். அதுவரை டெல்டா மாவட்டங்களில் தங்கி இருப்பார்கள் என்று தெரிய வருகிறது. #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
  Next Story
  ×