search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடக்கவில்லை- துரைமுருகனுக்கு ஜெயக்குமார் பதில்
    X

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடக்கவில்லை- துரைமுருகனுக்கு ஜெயக்குமார் பதில்

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரை முருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். . #ADMK #Jayakumar #DuraiMurugan
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “கிருஷ்ணாநீரைத் தேக்கி வைக்க தனியார் நிலம் கையகப்படுத்தாததால் நீர்த்தேக்கம் அமையாமல் 186 கோடி ரூபாய் பாழ்” என்ற ஒரு பொய்யான அறிக்கையை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் நடைபெற்ற 400 கோடி ரூபாய் ஊழலை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கினை திசை திருப்பும் நோக்கில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

    சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கும்மிடிப்பூண்டி கண்ணன் கோட்டை கிராமத்தின் அருகே தேர்வாய்கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய இரண்டு கண்மாய்களை இணைத்து ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்க கடந்த ஜனவரி 2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

    நில உரிமையாளர்கள், கூடுதல் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததால், பணி தாமதமானது.

    ஆனாலும் வழக்குகள் முடிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதமும், நீர்தேக்க கட்டுமானப் பணிகள் 65 சதவீதமும் முடிந்துள்ளது. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இந்த திட்டங்கள் முடிக்கப்படும்.

    2015-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை கொசஸ்தலை ஆற்றில் சுமார் 83,000 கன அடி வெள்ள நீர் சென்ற போது அருகில் உள்ள பட்டா நிலங்கள் வழியாக உபரி நீர்புகுந்து மண் அரிப்பு ஏற்படுத்தி மீண்டும் ஆற்றின் வழியே சென்றது.

    துரைமுருகன் கூறுவது போல 1966-ல் கொசஸ்தலையாற்றில் 92,260 கன அடிவெள்ள நீர் சென்றது என்பது தவறாகும். 59,760 கன அடி மட்டுமே வெள்ள நீர் சென்றது.

    65000 கன அடி வெள்ள நீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தடுப்பணையில், 2015-ல் வரலாறு காணாத மழை பெய்து, மிக அதிக அளவான வெள்ள நீர் விநாடிக்கு 83,000 கனஅடி சென்றதாலும், 100 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் இந்த தடுப்பணை சேதமடைந்தது.


    வெள்ளத்தில் சேதமடைந்த இந்த தடுப்பணையினை சரி செய்ய ஏற்கனவே ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக துரைமுருகன் தெரிவித்த செய்தி தவறானதாகும். இந்த பெருவெள்ளத்தில் சேதம் அடைந்த இந்த தடுப்பணையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரூ.18.17 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 1,20,000 கனஅடி வெள்ள நீர் செல்லும் வகையில் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    1971-1976-ல் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணை கட்டப்பட்டு அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்தது.

    அதே போல் 1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பில் உள்ள காவேரி கதவணையில் ஒரு தூண் சேதமடைந்து பின்னர் தி.மு.க. அரசால் சரி செய்யப்பட்டது.

    நிலைமை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆட்சியின் தவறுகளை மறைக்க, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #Jayakumar #DuraiMurugan
    Next Story
    ×