என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ரவுடி, வாலிபர் குத்திக்கொலை
    X

    மதுரையில் ரவுடி, வாலிபர் குத்திக்கொலை

    மதுரையில் நேற்று இரவு மர்ம நபர்களால் ரவுடி மற்றும் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை செல்லூர் வைத்தியநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது25), பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அசோக்குமார் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் வந்தனர். அவர்கள் யார் என்று பெற்றோர் கேட்டபோது, தெரிந்தவர்கள்தான் பேசி விட்டு வருகிறேன் என்று அசோக்குமார் வெளியே சென்றார்.

    சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது. பெற்றோர் சென்று பார்த்த போது அசோக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அசோக்குமாருக்கும், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களில் யாராவது அசோக்குமாரை கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் அருள்தாஸ்புரத்தில் நேற்று நள்ளிரவில் மற்றொரு வாலிபரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவரது பெயர் ஹரிராஜா (26). செல்லூர் பாக்கியநாதபுரம் அனுமார் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த பெரியபாண்டியின் மகன் ஆவார்.

    பெரியபாண்டி பாக்கிய நாதபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஹரிராஜா அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    நேற்று இரவு வெளியே போய் வருவதாக கூறி சென்ற ஹரிராஜா அருள் தாஸ்புரம் தண்ணீர் தொட்டி அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×