search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் - திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன்? - தமிழக அரசு விளக்கம்
    X

    திருவாரூர் - திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன்? என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #ElectionCommission #TNgovernment #ADMK

    சென்னை:

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.

    இதேபோல் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். என்பதால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது தமிழகத்தில் மழை காலம் தொடங்குவதாலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாலும் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்கக்கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், டிசம்பர் மாதங்களில் தீவிரமாக பெய்யும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

     


    அதில் இயல்பை காட்டிலும் பருவ மழை அதிக அளவில் பெய்யும் என்றும் சராசரி அளவைவிட 112 சதவீதம் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக பருவ மழை காலங்களில் வழக்கத்தைவிட பெருமழை பெய்து வருகிறது.

    திருவாரூர் தொகுதி காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. பருவ மழை காலத்தில் இங்கு பலத்த மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அரசு எந்திரங்கள் மழை நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே இந்த கால கட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தினால் தேர்தல் பணியாற்றுவது அரசு அதிகாரிகளுக்கு இயலாததாக இருக்கும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகையிட்டது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தினால் அது ஐகோர்ட்டு அதிகாரத்தை மீறிய செயலாகும். எனவே வழக்கு முடிவுக்கு வரும்வரை இங்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு தலைமைச் செயலாளர் கடிதத்தில் கூறியுள்ளார். #ElectionCommission  #TNgovernment #ADMK

    Next Story
    ×