search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி கள்ளத்தொடர்பை கணவன் நியாயப்படுத்தியதால் உயிரை விட்ட மனைவி
    X

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி கள்ளத்தொடர்பை கணவன் நியாயப்படுத்தியதால் உயிரை விட்ட மனைவி

    சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கள்ளத்தொடர்பை கணவன் நியாயப்படுத்தியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AdulteryVerdict #ExtramaritalAffair
    சென்னை:

    அட, பாவி மனுஷா... உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..!

    எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாதிரி ஒரு பெண் தானே!

    ஏன் கத்துறே? ஊரு உலகத்துல நடக்காத தப்பையா செய்து விட்டேன்? போ... போய் வேலையை பார்...!

    ஆமய்யா... ஏன் சொல்ல மாட்டே? நீயே கதின்னு உல் காலடியில் கிடக்கிறேன் பார்! நீ இதுவும் செய்வே! இதுக்கு மேலேயும் செய்வே! உன்னை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டாய்! போலீசுல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டினால் அவ வீட்டுக்கு போக மாட்டாய்...! இப்ப பாரு!

    அடியேய்.... எங்க... போலீசுக்கா? சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட ஒண்ணும் செய்ய முடியாதுடி! உள்ளதை சாப்பிட்டு கிட்டு ஒழுங்கா இரு....!

    - இது கற்பனையில் எழுதப்பட்ட வசனம் அல்ல. நிஜமாகவே சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் நடந்தது.

    ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24).

    இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

    நல்ல காதல் பூர்த்தி ஆனதும் கள்ளக்காதலுக்கு பிராங்கிளின் வலைவீச வலையில் சிக்கி இருக்கிறார் அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்.

    கள்ளக்காதலியே தஞ்சம் என்று அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.

    அப்போது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் கணவரிடம் கேட்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

    மனக்குமுறல் எப்படியாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும். நேற்று முன்தினம் மதியமே பிராங்கிளினுக்கு பணி முடிந்து விட்டது. ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவில்தான் வீட்டுக்கு வந்துள்ளார்.

    கள்ளக்காதலியுடன் உறவாடி விட்டு வந்திருப்பதை அறிந்ததும் புஷ்பலதா ஆத்திரத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்தான் மேலே குறிப்பிட்டு இருப்பது.

    வாக்குவாதம் முடிந்ததும் கோபத்தில் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.

    அவரது கோபத்தை கள்ளக்காதலியின் மோகம் கட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் எந்த தவறும் செய்யாத புஷ்பலதாவின் ஆத்திரத்தை எது கட்டுப்படுத்தும்?

    கணவரிடமும் நியாயம் கிடைக்காது. கோர்ட்டுக்கு போனால் கூட நீதி கிடைக்காது என்றதும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே முடித்துக் கொண்டார்.

    வீடு திரும்பிய பிராங்கிளின் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் மனைவியை தேடி இருக்கிறார். வெற்றுடலாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தான் நடந்த விபரங்களை பிராங்கிளின் தெரிவித்து இருக்கிறார்.


    தகாத உறவும் சரிதான் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதற்கு முதல் பலியாகி இருக்கிறார் புஷ்பலதா.

    சட்டம் வேறு! நடைமுறை வாழ்க்கை வேறு! நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வரலாம். சட்டத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை மாற்ற இயலுமா?

    பிராங்கிளினும் விரும்பினார். கள்ளக்காதலியும் விரும்பினார். இருவரது சம்மதத்துடன் தகாத உறவும் நல்ல உறவாகி விட்டது.

    அதற்காக புஷ்பலதாவும் ‘நீயும், நானும்’ என்பதுதான் நமது சட்டம். நீ ஒருத்தியை தேடிச் சென்றிருக்கிறாய். நானும் ஒருவனை தேடிக் கொள்கிறேன் என்று செல்வாரா? அவர் இந்த மண்ணின் கலாச்சாரத்தின் நடமாடும் அடையாளம் அல்லவா? தனக்கொரு கேடு என்றால் தன்னைத்தான் அழித்துக் கொள்வாள். அதைத்தான் செய்து இருக்கிறார்.

    சரி, இனி புஷ்பலதாவின் சாவுக்கு காரணமாகி விட்டார் என்ற சட்டப்பிரிவின் மூலம் பிராங்கிளின் தண்டனைக்கு உள்ளாகலாம்.

    எந்த தவறும் செய்யாத அவர்களது குழந்தையும் தண்டிக்கப்பட்டுள்ளதே! அதற்கு யார் பதில் சொல்வது?

    யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகி விடலாம். பாண்டிய மன்னன் எடுத்த தவறான முடிவு மதுரையின் அழிவுக்கு வழி வகுத்ததல்லவா! #AdulteryVerdict #ExtramaritalAffair
    Next Story
    ×