search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமேடைகளில் அமைச்சர்கள் நாகரீகத்துடன் பேச வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
    X

    பொதுமேடைகளில் அமைச்சர்கள் நாகரீகத்துடன் பேச வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

    பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது என்று ஜிராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #gramakrishnan #tnministers

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி ஆலம்பாறையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் போலீசாரும், கம்யூனிஸ்டு நிர்வாகிகளை அவதூறாக பேசியும், தாக்கவும் செய்துள்ளனர். அவர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கழுவன்திட்டையில் வருகிற 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களை மூடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அரசு பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது. தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மூடப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நீதிபதிகள் குழு ஆய்வு நடந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்கக் கூடாது.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு மாநில அரசை சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது.


    ஜி.எஸ்.டி. மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது.

    மாநில அரசின் மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் நிறைய இடைவெளி உள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அவசியம் என்பதை ஏற்க முடியாது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை கோர்ட்டு விடுவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. நீர் நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் தாமிரபரணி நதியில் புஷ்கர விழா நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நெல்லை மற்றும் குமரியில் மதசார்புடன் நடத்த இருக்கும் புஷ்கர விழாவை அனுமதிக்க கூடாது.

    அவதூறாக பேசினார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதே விவகாரத்தில் புகார் கூறப்பட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எடுபிடி அரசாக இருக்கிறது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக மக்கள் உரிமைக்காக போராடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

    விவசாய நிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என்று போராடிய எங்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். தமிழிசையை அவதூறாக பேசி விட்டார் என்று மாணவி சோபியா மீது வழக்கு போட்டனர். தமிழக அரசு இப்படித்தான் செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #gramakrishnan #tnministers

    Next Story
    ×