search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க., காங்கிரசை கண்டித்து ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    தி.மு.க., காங்கிரசை கண்டித்து ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு உதவி புரிந்த தி.மு.க., காங்கிரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஊட்டி:

    இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு உதவி புரிந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர். அர்ஜூணன் எம்.பி. தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி., செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. பேசியதாவது:-

    தொப்புள் கொடி உறவான தமிழர்களின் படுகொலைக்கு காங்கிரஸ், தி.மு.க. துணை நின்றது. கடந்த 1980-ம் ஆண்டில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கினார். ஆனால் 27.4.2009 அன்று இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியபோது சென்னையில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதுபோல நடித்து, பிறகு திடீரென உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார்.

    இந்த படுகொலைக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், மத்திய அரசு இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசு மூலம் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற குழுவினர் ராஜபக்சே அளித்த விருந்தில் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வாங்கி வந்தனர். எனவே தான் அவர்கள் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொள்கை பரப்பு செயலாளர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கோவை மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதால் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். தி.மு.க. ஆட்சியின்போது விடப்பட்ட டெண்டர் முறையே தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். எனவே தவறான குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான பதிலை அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது கிராம மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சாந்தி ராமு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மில்லர், விவசாய பிரிவு மாநில துணை செயலாளர் பாரதியார், மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், ஊட்டி நகர செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×