என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழலில் தொடர்பு: அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்யாதது ஏன்? - தங்கதமிழ்செல்வன்
    X

    குட்கா ஊழலில் தொடர்பு: அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்யாதது ஏன்? - தங்கதமிழ்செல்வன்

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam

    கொடைக்கானல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கொடைக்கானல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆனால் குட்கா ஊழலில் ரூ.150 கோடி வரை அமைச்சர், காவல் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.

    மக்களால் ஓரம் கட்டப்பட்ட முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தங்களை மிகப் பெரிய தலைவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற வில்லை. இது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    முதல்-அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் இன்னும் மனதளவில் இணையவில்லை. விரைவில் தமிழகத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும். அதில் வெற்றி பெறுவோம். நாங்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறா விட்டால் அ.ம.மு.க.வை கலைத்து விட்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து விடுகிறோம். இது நடக்காது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பது உறுதி.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கூடி விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் மிகப் பெரிய அரசியல் மாற்றம் உருவாகும்.

    தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினை மீண்டும் தலை தூக்கி வருகிறது. மின் வெட்டு உள்ளது என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர் எதற்கு? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் கவர்னர் தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam

    Next Story
    ×