என் மலர்
செய்திகள்

புதுக்கடை அருகே 2 பேர் பலி: விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது
லாரி விபத்தில் 2 பர் பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே புதுக்கடை குழிஞ்ஞன்விளையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 30), தொழிலாளி. இவருடைய அண்ணன் ரமேசுக்கு வருகிற 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை நடராஜன் கொடுத்து வந்தார்.
அவர் உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் உள்ள உறவினருக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்தார். அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (70) என்பவரை பார்த்ததும் அவர் அருகில் நடராஜ், ஸ்கூட்டரில் சென்றார். அவர்கள் இருவரும் சாலையோரத்தில் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக காப்புக்காடு உணவு குடோனில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நடராஜன், தங்கராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததால் அதில் இருந்த அரிசி மூடைகள் சாலையில் விழுந்தன. விபத்து நடந்ததும் லாரியை ஓட்டி வந்த சூரியகோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (35) தப்பி ஓடிவிட்டார். லாரியில் இருந்த மூடை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது
விபத்து பற்றி கேள்விப்பட்டதும். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியானவர்களது உடல்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் அஜித்குமாரை கைது செய்தனர். அவரிடம் விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Next Story






