search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
    X

    கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சமாதிக்கு வந்து மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiMemorial
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்தார். சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


    அவருடன் ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். பேராயர் எஸ்றா சற்குணமும் இன்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

    இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கருணாநிதியின் சமாதியை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் அருகில் நின்ற படி பொதுமக்கள் சமாதியை பார்த்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். மாலை, மலர் வளையம் வைக்க விரும்புபவர்கள் உள்ளே சென்று சமாதியில் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் ஏராளமானோர் சமாதிக்கு வந்த வண்ணம் உள்ளதால் அங்கு தற்காலிகமாக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சமாதியை சுற்றி நடந்து வந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வட்ட வடிவில் பிளாட்பாரமும் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூரை அமைக்கும் பணியை முன்னின்று கவனித்து வருகிறார்கள். சாரை சாரையாக மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் போலீசார் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி சமாதிக்கு செல்லும் நுழைவு வாயிலான அண்ணா சமாதி முன்பு ஏராளமான மோட்டார்சைக்கிள்களிலும், கார்களிலும் வந்து மக்கள் இறங்கி செல்வதால் அங்கு நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. கூட்டம் அதிகம் இருப்பதால் அங்கு தற்காலிக கடைகளும் முளைத்துள்ளன.

    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பொது மக்கள் கூறியதாவது:-

    சரஸ்வதி (அரசு ஊழியர்):- 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். அண்ணாவின் மனதில் இடம் பிடித்தவர். இப்போது அவரது சமாதியின் அருகே கருணாநிதியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த சமாதியை அழகிய வடிவில் அமைக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணமாகும்.


    கலையரசி:- நான் வியாசர்பாடியில் இருந்து வருகிறேன். நேற்று கூட்டமாக இருந்ததால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இன்று அவர் நினைவிடத்தை நேரில் வந்து பார்த்தேன்.

    அரசியலில் அவர் முதுபெரும் தலைவர். மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை தந்தவர். பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியவர். அண்ணாவின் சமாதி அருகே கருணாநிதியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவரது ஆன்மா சாந்தி அடையும்.

    ராஜேந்திர பிரசாத்:- நான் கோவையில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தேன். கலைஞரின் அஞ்சலி நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டேன். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று பார்த்தேன். என் உள்ளம் படபடப்பாக உள்ளது. அண்ணாவின் பெயரை அடிக்கடி உச்சரித்து அவரது கொள்கை, கோட்பாடுகளை கட்டிக் காத்து வந்த கலைஞருக்கு அவரது அருகிலேயே சமாதி அமைக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்தவர். அவருக்கு சமாதி எழுப்பப்படும்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

    ராஜூ நாராயணன் (திருவாரூர்):- நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். திருவாரூரில் கலைஞர் படித்த வாசோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் நானும் படித்தேன். திருவாரூரில் உள்ள அனைத்து பகுதிகளும் அவரது நினைவை தாங்கி உள்ளது.

    எங்களுக்கு அவரது நினைப்பு அப்படியே உள்ளது. நேற்று முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவரது நினைவிடத்தையும் பார்த்து விட்டுத்தான் ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இன்று இங்கு வந்துள்ளேன். அவரது நினைவிடத்தை மிகவும் அழகாக வடிவமைப்பில் அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiMemorial
    Next Story
    ×