search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்
    X

    கருணாநிதியை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்

    திமுக தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், அண்ணா நினைவிட வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), 11 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று மாலை மரணம் அடைந்தார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் முந்தைய சம்பவங்களை எடுத்துக்கூறி ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதால், சட்டச் சிக்கல் நீங்கியது. எனினும், மரபுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது. இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்யப்போவதில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

    நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. அடக்கம் செய்யும் இடத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இடம் முடிவு செய்யப்பட்டதும், அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. 

    ராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, கருணாநிதி உடல் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும். #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    Next Story
    ×