search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூவம், அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் - மாநகராட்சி தகவல்
    X

    கூவம், அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் - மாநகராட்சி தகவல்

    கூவம் மற்றும் அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். #ChennaiCorporation

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை நகரத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம், சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களே என நீதி மன்ற ஆணைகளின்படி நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது.

    அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் என கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விரிவாக்கப்பட்ட பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக்கால்வாய்களில், 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiCorporation

    Next Story
    ×