search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை ஜெயிலில் கைதி படுகொலை- 2 வார்டன்கள் சஸ்பெண்டு
    X

    கோவை ஜெயிலில் கைதி படுகொலை- 2 வார்டன்கள் சஸ்பெண்டு

    கோவை ஜெயிலில் கைதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பணியில் இருந்த 2 வார்டன்களை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவை பீளமேடை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் அடிதடி வழக்கில் கடந்த மாதம் 5-ந் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பேரூர் பரட்டையம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கடந்த 25-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    ரமேஷ் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. டாக்டர்கள் அறிவுரைப்படி தினமும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். விஜய் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மருந்து சாப்பிட்டு வருகிறார். விசாரணை கைதிகளான இருவரும் கோவை மத்திய ஜெயிலில் 3-வது பிளாக்கில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று மதிய உணவுக்காக கைதிகள் திறந்து விடப்பட்டனர்.

    அப்போது கழிவறை சென்று விட்டு வந்த விஜய், ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முடிந்த பின் ரமேஷ் 3-வது பிளாக் அருகே திண்ணையில் படுத்திருந்தார். அங்கு சென்ற விஜய் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து ரமேசை தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெயில் ஊழியர்கள் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்தார்.

    இதுகுறித்து ஜெயிலர் தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக ஜெயிலுக்குள் சென்ற போலீசார் சக கைதிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சிறை ஊழியர்கள், சக கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயிலில் கைதிகளுக்குள் நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடைநம்பி உத்தரவிட்டார். அதன்பேரில் ஜெயில் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

    மோதல் சம்பவம் நடந்த போது தலைமை வார்டன் முனுசாமி (49), வார்டன் ஆதி கருப்பசாமி(27) ஆகியோர் 3-வது பிளாக்கில் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தததாக கூறி இருவரையும் சஸ்பெண்டு செய்து எஸ்.பி. செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மத்திய ஜெயிலில் மொத்தம் 1768 கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதிகள் 807 பேர் ஆவர். நேற்றைய சம்பவத்தில் ரமேசுக்கும், விஜய்க்கும் இடையே முன்விரோதம் எதுவும் இல்லை. விஜய் கழிவறை சென்று விட்டு திரும்பிய போது ரமேஷ் அவரது தாயாரை பற்றி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இதனால் விஜய் ஆவேசமடைந்து ரமேசை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே, மோதல் சம்பவத்தை தொடர்ந்து கோவை மத்திய ஜெயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×