என் மலர்
செய்திகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் கமல்ஹாசன் (கோப்புப்படம்)
தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது - கமல்ஹாசன் ட்வீட்
ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு, மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும்
தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது. தமிழகமே அதைப்பின்பற்றி இழந்த அரசியல்மாண்பை மீட்டெடுக்கவேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை, புதிய பாடமாக கற்றுத் தந்துள்ளது. இப்போராட்டம். இக்கல்வி கற்று, மக்கள் நீதி மய்யம் பள்ளியாய் மாறி வீதி தோறும் இச்செய்தியை பரப்பும்.
தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வெறும் சாட்சிகளாக , திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத் துவங்கிவிட்டோம்
சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story