search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வழிமறித்து மீண்டும் போராட்டம்
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வழிமறித்து மீண்டும் போராட்டம்

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வழி மறித்து 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராயபுரம்:

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கனாக கொடுக்கப்பட்டது என்றும் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது எனவும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனை தினகரன் மறுத்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை யில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தினகரன் வந்த போது 20 ரூபாய் நோட்டை காட்டி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோ‌ஷமிட்டனர்.

    இந்த நிலையில் தினகரனுக்கு எதிராக மீண்டும் 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சந்தோஷ், சரவணகுமார், ரசாக் ஆகியோர் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தினகரன் அறிவித்து இருந்தார். இதனை வழங்குவதற்காக தினகரன் இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவர்களின் வீட்டுக்கு வந்தார். அவர் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டார்.

    தினகரன் வந்திருப்பதை அறிந்த ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 ரூபாய் நோட்டுடன் ஜீவரத்தினம் சாலையில் திரண்டு இருந்தனர்.

    அவர்கள் தினகரனின் கார் வந்ததும் அதனை மறித்து 20 ரூபாய் நோட்டை காட்டியபடி ரூ.10 ஆயிரம் எங்கே என்று கோ‌ஷமிட்டனர்.

    இதனை கண்டு தினகரனுடன் வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் 20 ரூபாய் நோட்டுடன் நின்ற பெண்களை பார்த்து சில வார்த்தைகளை கூறினர்.

    இதனால் பெண்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெண்களை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனுக்கு எதிராக திரண்டு நின்ற பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினர்.

    இதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டினர். தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது காரில் தினகரன் அமர்ந்து இருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இதைத் தொடர்ந்து தினகரன் தனது ஆதரவா ளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தாக்குதல் தொடர் பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×