search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம்: த.வெள்ளையன் அறிவிப்பு
    X

    சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம்: த.வெள்ளையன் அறிவிப்பு

    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் ‘பிலிப்கார்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ‘ஆன்-லைன்’ வணிகத்தை ஊக்குவித்து, சில்லரை வணிகத்தை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் சில்லரை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.

    ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர் கள் குறைந்த விலையில் பொருட் களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகையில் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லரை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருட் களை விற்பனை செய்யும் உரிமையை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடு.

    எனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். பொருட்களில் அதன் எம்.ஆர்.பி. அச்சிடப்படுவது போல அதிகபட்ச உற்பத்தி அடக்க விலையும் அச்சிடப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு என்பதை குறிக்கும் வகையில் தனி இலச்சினையோ அல்லது முத்திரையோ அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வணிகம் உயரும்.

    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×