search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்- வைகோ
    X

    டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்- வைகோ

    நெல்லை மாணவன் தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.#AlcoholicFather #DrinkingHabit #StudentSuicide #vaiko
    கே.கே.நகர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தந்தையின் குடிபழக்கத்தால் நெல்லையில் பிளஸ்-2 மாணவன் தினேஷ் தற்கொலை செய்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இனிமேலும் மதுவால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் தற்கொலை செய்துள்ளான். தற்கொலை செய்வது வருத்தம் அளிக்கக்கூடியது. எதுவாக இருந்தாலும் வாழ்ந்து போராட வேண்டும். டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தினேஷ் போராடியிருக்கலாம்.

    டாஸ்மாக் கடைகளால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளை கூட நாசமாக்கி விடுகின்றனர். தந்தை குடித்து விட்டு மீதி வைக்கும் மதுவை மாணவர்கள் எடுத்து குடிக்கின்றனர். இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு மது குடித்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் மதுவை எதிர்த்து நான் மேற்கொண்ட மராத்தானில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 5 சதவீத மாணவர்கள் மட்டுமே மது குடிக்கின்றனர். மீதி 95 சதவீதம் பேர் குடிக்கவில்லை.

    டாஸ்மாக் கடைகள் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பதாக உள்ளது. மாணவன் தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். எனது தாய் 100 வயதிலும் மதுவை எதிர்த்து போராடி இறந்தார்.



    நீட் தேர்வு என்கிற நாசக்கார திட்டம் ஏழை , எளிய , கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவை சிதைத்துள்ளது. தற்போது நீட் தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் என வெளிமாநிலங்களில் அமைத்துள்ளனர். ஏழை மாணவர்கள் எப்படி வெளி மாநிலங்களுக்கு சென்று தங்கி படிக்க முடியும். தமிழகத்தில்தான் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் கல்வி அதிகாரி கூறும் போது, எங்களுக்கு கோர்ட்டு ஆர்டர் இன்னும் வரவில்லை என்கிறார். கோர்ட்டு ஆர்டர் கிடைத்ததும் எங்களது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்கிறார்.

    ஐகோர்ட்டு ஆர்டரையே மதிக்காத வகையில் மத்திய அரசின் கல்வித்துறை உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே அவர் நீட் தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.#AlcoholicFather #DrinkingHabit #StudentSuicide #vaiko
    Next Story
    ×