என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டம்: மு.க.ஸ்டாலின்
    X

    பஸ் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டம்: மு.க.ஸ்டாலின்

    தமிழக அரசு பஸ் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக இதைவிட தீவிரமான போராட்டங்களை நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    கொளத்தூரில் பஸ் மறியலில் ஈடுபட்டு கைதான தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், பேருந்து கட்டணத்தை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மறியல் போராட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.



    இன்றுடன் முடிவடைந்து விடக்கூடியதாக இந்தப் போராட்டம் இருக்காது. நேற்றைய தினம், பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக ஒரு கபட நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்.

    போக்குவரத்துத்துறை என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறை என்பதை கருத்தில் கொண்டு, 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது, பேருந்து கட்டணத்தில் ஒரு சல்லிகாசு கூட உயர்த்தப்படவில்லை.

    ஆனால், இப்போது 50 சதவீதம், 108 சதவீதம் என அதிமுக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. எனவே, யாருடைய இதயத்தில் ஈரம் இருந்தது என்பதை பொதுமக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தபோது, தினசரி டிக்கெட் கலெக்‌ஷன் 12 கோடியே 90 லட்சம் என்ற அளவில் இருந்தது. கழக ஆட்சியில் கட்டண உயர்வு எதுவும் இல்லாத நேரத்திலும், தினசரி பேருந்து கட்டண வருவாய் 20 கோடியே 46 லட்சமாக அதிகரித்தது. அந்தளவுக்கு மக்களின் நண்பனாக போக்குவரத்துக்கழகத்தை மாற்றியது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு.

    எனவே, இப்போதைய கட்டண உயர்வுக்கு, எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக தோல்விதான் காரணமே தவிர, போக்குவரத்துக் கழகங்களின் தோல்வி அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை நேற்றைய தினம் கூட்டி, அதில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படை யில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சிக்கு நான் ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புவது, உடனடியாக பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.

    அதேபோல, அவ்வப்போது பேருந்து பயண கட்டணங்களை உயர்த்தும் அதிகாரத்தை போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதையும் உடனே திரும்பப் பெற வேண்டும். சிறையில் உள்ள மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை எல்லாம் அரசு உடனே நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக இதைவிட தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். எனவே, விரைவில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம்.

    கே: தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறாரே?

    பதில்: 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின் போதும் போக்குவரத்துத்துறையில் ஏற்படும் நஷ்டங்களை தடுக்க, அதிகாரிகளும் அமைச்சர்களும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சொன்னபோது, முதலைச்சராக இருந்த தலைவர் கலைஞர், “போக்குவரத்துத்துறை மக்களுக்கு சேவையாற்றும் துறை என்பதால், அதில் எத்தனை கோடிகள் நஷ்டம் ஏற்பட்டாலும் அரசு ஏற்கும்”, என்று தெரிவித்து, ஒரு சல்லிகாசு உயர்வு கூட அறிவிக்கவில்லை.

    தற்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்துத்துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்ய, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறோம். இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் அந்தக்குழு ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    எனவே, கட்டணத்தை உயர்த்தாமலேயே நஷ்டத்தை சரிசெய்வதற்கான வழிகள் நிச்சயம் இருக்கின்றன. ஆனால், அதுபற்றி எல்லாம் இந்த அரசு கவலைப்படவில்லை.

    இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு பேரம் நடத்தலாம், எத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கு எத்தனை கோடி கொடுக்கலாம், அதற்காக எப்படியெல்லாம் ஊழல் செய்யலாம், லஞ்சம் வாங்கலாம், கமி‌ஷன் வாங்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களே, தவிர மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×