என் மலர்
செய்திகள்

உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து பஞ்சாயத்துக்குட்பட்டது பெரியசெம்மேட்டுப்பட்டி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரமாக தண்ணீர் முறையாக விநியோகம் செய்யாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த கிராமத்தில் போர்வெல் அமைக்கப்பட்டும் அதை இதுவரை பயன் பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதன் காரணமாக பெண்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்துவரும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை பெரியசெம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த யூனியன் துணை ஆணையாளர் தெய்வ ராமன், சீமானூத்து செயல் அலுவலர் முருகேசன், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஏற்கனவே போடப்பட்ட போர்வெல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
2 மணி நேரம் நடந்த மறியலால் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.






