search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - நாகை, விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை
    X

    கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - நாகை, விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை

    கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாகப்பட்டிணம், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிற்பகலில் சற்று ஓய்ந்து இருந்த மழை மாலையில் வெளுத்து வாங்கியது. இரவிலும் மழை நீடித்தது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.



    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாகப்பட்டிணம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் நாளை நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×