search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தம்: விபத்தில் இறந்த 9-ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்
    X

    குடியாத்தம்: விபத்தில் இறந்த 9-ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்

    குடியாத்தத்தில் விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். வாழை மண்டி வியாபாரி. இவரது மகன் ஜஸ்வந்த் குமார் (வயது 15). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில், மாணவன் ஜஸ்வந்த் குமார் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றி பார்க்க ஆட்டோவில் சென்றார். ஆந்திர வனப் பகுதியில் பெய்த கனமழையால் மோர்தானா நிரம்பியுள்ளது.

    அணையை சுற்றிப்பார்த்த பிறகு, மாலை மோர்தானா காட்டுப்பாதையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.

    விபத்தில் சிக்கிய ஜஸ்வந்த் குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான பள்ளி மாணவன் ஜஸ்வந்த்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறந்த பின்பும் இவ்வுலகை மகன் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவருடைய கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர்.

    குடியாத்தம் ரோட்டரி தலைவர் அண்ணாமலை, உடல் உறுப்பு மற்றும் கண்தான குழு தலைவர் கோபிநாத் ஆகியோர் உதவியுடன் அகர்வால் கண் மருத்துவமனைக்கு மாணவன் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
    Next Story
    ×