என் மலர்
செய்திகள்

போலி நியமன ஆணை வேலை வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மகேந்திரன் பட்டதாரியான இவர் வேலைக்காக தனியார் இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்து வைத்து இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், ‘‘உங்களுக்கு துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில்வேலை கிடைத்து உள்ளது. பணியில் சேருவதற்கு முன்பு ரூ. 24 ஆயிரம் தர வேண்டும்’ என்றார்.
மேலும் துரைப்பாக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிற்கும் வாலிபரிடம் பணத்தை கொடுத்து பணி நியமன அணையை பெற்றுக் கொள்ளும்படி கூறி இருந்தார்.
இதனை நம்பிய மகேந்திரன் ரூ. 24 ஆயிரத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்.
அதனை மகேந்திரன் சரிபார்த்த போது போலி நியமன ஆணை என்பது தெரிந்தது. இதையடுத்து பணம் வாங்கிய வாலிபரை மடக்கி பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவன் தி.நகரை சேர்ந்த சுபன் என்பது தெரிந்தது. அவனிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கைதான சுபன் கூறும்போது, ‘எனக்கு பணம் வாங்க வேண்டியவரின் விபரம் மற்றும் செல்போனில் தெரிவிப்பார்கள். நான் பணத்தை பெற்று கோயம்பேட்டில் நிற்பேன். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கமிஷன் கொடுப்பார்கள். அவர்களை பற்றிய விபரம் தெரியாது’ என்று கூறியுள்ளார்.
எனவே இணையதளம் மூலம் வேலை தேடும் பட்டதாரிகளை குறிவைத்து பெரிய கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அவர்கள் ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






