search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. பக்கம் சாய்வார்களா?
    X

    அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. பக்கம் சாய்வார்களா?

    அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வில் இணைய அச்சாரம் போடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை, தமிமுன் அன்சாரி தலைமையிலான மனித நேய ஜனநாயக கட்சி, கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிகள் வெற்றி பெற்றன.

    பிப்ரவரி மாதம் 18-ந் தேதி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அவரை ஆதரித்தனர்.

    கூவத்தூரில் எம்.எல்.ஏ.க் களுக்கு பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக சரவணன் எம்.எல்.ஏ. வீடியோ வெளியான போது 3 எம். எல்.ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மாட்டிறைச்சி விவகாரத்திலும் இவர்கள் ஒரே நிலைப்பாட்டை எடுத்து சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ஒத்திவைப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருவது குறித்து மு.க.ஸ்டாலினை 3 எம்.எல். ஏ.க்களும் 2 முறை நேரில் சந்தித்து பேசினர்.

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆதரிக்க உள்ளனர்.

    ஆனால் தமிமுன் அன்சாரி காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள முரசொலி பத்திரிகையின் பவள விழாவில் 3 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கி உள்ளார்.

    இந்த விழாவில் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று தி.மு.க.வில் இணைய அச்சாரம் போடுவார்களா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது சில நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஜெயலலிதா இருந்த போது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வெளிப்படையாக பேசியது கிடையாது. ஆனால் இப்போது சட்டசபையில் இவர்கள் அனைவரது முன்னிலையில் மு.க.ஸ்டாலினுடன் பேசுகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

    அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில் இவர்கள் மு.க. ஸ்டாலினுடன் பேசுவது, வருங்காலத்தில் இவர்கள் தி.மு.க. பக்கம் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×