search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரக்கு, சேவை வரி விதிப்பு எதிரொலி: ஓட்டல்களில் சாப்பாடு விலை 18 சதவீதம் வரை உயர்வு
    X

    சரக்கு, சேவை வரி விதிப்பு எதிரொலி: ஓட்டல்களில் சாப்பாடு விலை 18 சதவீதம் வரை உயர்வு

    சரக்கு, சேவை வரி விதிப்பால் ஓட்டல், கடைகளில் சாப்பாடு விலை 18 சதவீதம் வரை உயருகிறது என்றும், இனிப்பு-கார வகை தின்பண்டங்களின் விலை அதிகரிக்கிறது என்றும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    சென்னை:

    நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் சரக்கு, சேவை வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சரக்கு, சேவை வரி இன்று (சனிக்கிழமை) முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வரி விதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராது என்று மத்திய அரசு சொன்னாலும், ஓட்டல்களில் சாப்பாடு உள்பட தின்பண்டங்களின் விலை உயருவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    அதன்படி, ஓட்டல்களில் சாப்பாடு விலை 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயருகிறது. இதேபோல், டீக்கடைகளில் டீ விலை 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல் கடைகளில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக 2 சதவீதம் வாட் வரி தான் இருந்தது. இந்த வரியை மாற்றி, மத்திய அரசு சரக்கு, சேவை வரியை அமல்படுத்துகிறது. ஓட்டல்களை பொறுத்தவரையில், ஏ.சி.யுடன் உள்ள ஓட்டல்களுக்கு 18 சதவீதமும், ஏ.சி. அல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீதமும் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பாடு விலை 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பார்சல்களுக்கும் இது பொருந்தும்.

    சாப்பாடு வகைகளை போலவே, இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதமும், கார வகைகளுக்கு 12 சதவீதமும் சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயரும். இதேபோல், பேக்கரி கடைகளுடன் கூடிய டீக்கடைகளில் டீ விலை 5 சதவீதம் அதிகரிக்கும்.



    இதுதொடர்பாக நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை அவர் காதில் வாங்கவில்லை.

    சரக்கு, சேவை வரி விதிப்புக்கு எங்கள் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதுகுறித்து பேசவில்லை. வரி விதிப்பு தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.

    நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யும் அனைத்து ஓட்டல்களுக்கும் இந்த சரக்கு, சேவை வரி விதிப்பு பொருந்தும். ஓட்டல் கடைகளில் உற்பத்தி செய்து அதில் கிடைக்கும் லாபத்தை விட, வரி தான் அதிகமாக இருக்கிறது. இதனால் பிரச்சினை தான் வரும்.

    ஓட்டல்களை நம்பி தமிழகத்தில் 2 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கும். எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஓட்டல்களில் ஏ.சி.க்களை அகற்றிவிட உரிமையாளர்கள் அனைவரும் முடிவு செய்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசு சரக்கு, சேவை வரியை ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு விதித்தாலும், அதை ஈடுகட்டுவதற்கு பொதுமக்கள் மீது தான் விலை உயர்வை திணிப்பதாக அதன் உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    சாதாரண டீக்கடைகளில் சரக்கு, சேவை வரி விதிப்பால் விலை உயருமா? என்பது குறித்து சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரிடம் கேட்டபோது, ‘எங்களுக்கு 5 சதவீதம் சரக்கு, சேவை வரி விதித்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதன் காரணமாக டீ விலையை நாங்கள் உயர்த்துவதற்கு வாய்ப்பு இல்லை’ என்றார். 
    Next Story
    ×