என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே முதியவரை ஏமாற்றி 10 பவுன் நகைகள் கொள்ளை
    X

    சூலூர் அருகே முதியவரை ஏமாற்றி 10 பவுன் நகைகள் கொள்ளை

    • சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறி ஏமாற்றினார்
    • நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பரமசிவம் வீட்டில் இருந்த போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அரசால் வழங்கப்பட்டு உள்ள சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் சோலார் பேட்டரிகளை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வாலிபர் பரமசிவத்தை மாடிக்கு சென்று சோலாரை சரி செய்யுமாறு கூறினார். இதனையடுத்து அவர் மேலே சென்றார்.

    அப்போது அந்த வாலிபர் பரமசிவம் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்க காசு மாலை, செயின், கம்மல், மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தனது பையில் வைத்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் பரமசிவம் கீழே வந்தார். பின்னர் அந்த வாலிபர் வேலை முடிந்து விட்டதாக கூறி தப்பிச் சென்றார்.

    கடந்த 21-ந் தேதி பரம சிவத்தின் குடும்பத்தினர் அந்த பகுதியில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. சோலார் சரி செய்ய வந்த வாலிபர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பரமசிவம் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலார் சரி செய்ய வந்ததாக கூறி முதியவரை ஏமாற்றி 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×