search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி: டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின்
    X

    துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி: டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின்

    தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin #Thoothukudi #Sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 100 நாட்களுக்கு மேலாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று நடத்திய பேரணியில் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வது போல் நவீன துப்பாக்கிகளை வைத்து காவல் துறையினர் 11 பேரை சுட்டுத் தள்ளி உள்ளனர். மேலும் பல பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுகின்றனர்.

    காவல் துறையின் காட்டுமிராண்டித் தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும்.


    டி.கே.ராஜந்திரன் ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர். இவர் மீது சி.பி.ஐ. விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் துப்பாக்கிசூடு நடந்துள்ளதால் தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் இவ்வளவு சம்பவங்கள் உயிர் பலிகள் ஏற்பட்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்க்கவில்லை. தென்மாவட்ட அமைச்சர்களை கூட அனுப்பி வைக்கவில்லை.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப எந்த அமைச்சர்களும் முயற்சி எடுக்கவில்லை. இது இந்த அரசின் கையாலாகாததனமாகும். இந்த விசயத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    அமைச்சர் ஜெயக்குமார், தங்களது பதவி மற்றும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கிசூடு தவிர்க்க முடியாதது என கூறி உள்ளார். அங்கு பலியானது மனித உயிர்கள். அங்கு பேரணி நடைபெறுவது காவல் துறைக்கு முன் கூட்டியே தெரியும். அவர்கள் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த ஆட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் இப்படித்தான் உளறிக் கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Thoothukudi #Sterliteprotest
    Next Story
    ×