என் மலர்
செய்திகள்

நவநீத கிருஷ்ணன் தற்கொலை மிரட்டல் கபட நாடகம்- முத்தரசன் கடும் தாக்கு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ‘கெடு’ இன்றுடன் முடிகிறது. ஆனாலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
இந்த விசயத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதாக கூறி பிரச்சினையை திசை திருப்பி வருகின்றனர். உச்சகட்டமாக நவநீத கிருஷ்ணன் எம்.பி. பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்” என்கிறார்.
எந்த ஒரு விசயத்துக்கும் தற்கொலை தீர்வாகாது. அது கோழைத்தனமான முடிவு. இவர் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? மக்களை ஏமாற்றுவதற்கும் பிரச்சினையை திசை திருப்புவதற்கும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செய்யும் கபட நாடகம் இது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வர இருப்பதை தடுப்பதற்காக பா.ஜனதாவுக்கு உதவி செய்யும் வகையில்தான் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செயல்படுகிறார்களே தவிர வேரொன்றும் இல்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் காவிரி பிரச்சினை, ஆந்திரா பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளை பற்றியும் பாராளுமன்றத்தில் பேச முடியும். அந்த வாய்ப்பை உருவாக்க கூடாது என்பதற்காக பாரதீய ஜனதா-அ.தி.மு.க. சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அடிபணிந்து அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர். அதனால்தான் போராடுவது போல் நடிக்கிறோம். நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் என்று செயல்படுகிறார்கள்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து மத்திய அரசை காப்பாற்ற அ.தி.மு.க. நடத்தும் கபட நாடகம் இது என்பதை மக்கள் அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #mutharasan #navaneethakrishnan #cauveryissue