search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியபோது எடுத்த படம்.

    மதவாத சக்திகளுடன் ஒருபோதும் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது: அமைச்சர் செல்லூர் ராஜூ

    மதவாத சக்திகளுடன் அ.தி.மு.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செல் லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியால் அ.தி.மு.க.விற்கு எந்த பின்னடைவும் இல்லை. நமக்கு ஒரே எதிரே தி.மு.க.தான். அந்த கட்சி டெபாசிட் இழந்து விட்டது. மக்கள் தி.மு.க.வை புறக்கணித்து விட்டார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை முன்னிறுத்தி பிரசாரம் செய்தோம். அவர் நல்லவர், வல்லவர் என்று மக்களிடம் வாக்குசேகரித்தோம். அதன் பிறகு தேர்தல் நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். சிறை சென்றார். மீண்டும் தேர்தல் நடந்தபோது அவர் வேறு சின்னத்தில் போட்டியிட்டார். நமக்கு இரட்டை இலை கிடைத்தது.

    மத்திய அரசுடன் நாம் இணக்கமாக இருந்தோம். மத்திய அரசும் தமிழக அரசிடம் இணக்கமாக செயல்பட்டது. ஆனாலும் மத்திய அமைச்சர்கள் சிலர் அ.தி.மு.க. அரசை விமர்சித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போது எங்களிடம் பேசும்போது பாரதிய ஜனதாவுடன் ஒரு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறை செய்யக் கூடாது என்றார்.


    எந்த தேர்தலிலும் மதவாத சக்தியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக செயல்பட்டார். ஆனால் பிரதமர் மோடி ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் செயல்பட்டார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்திய அரசிடம் அதே இணக்கத்தை நாமும் கடைபிடித்தோம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பிரச்சனைகளில் மக்களுக்கு மத்திய அரசின் மீது கோபம் ஏற்பட்டது.

    இதனை பயன்படுத்தி கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மத்திய அரசை விமர்சித்தார். இதனால் சிறுபான்மை மக்கள் குறிப்பாக 30 சதவீத முஸ்லிம்கள் தினகரனுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து விட்டனர். இதனால் அவர் ஹீரோ ஆகிவிட்டார்.

    அ.தி.மு.க. ஒரு மத சார்பற்ற இயக்கம் என்பதை நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா. அவரது வழியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் மாறமாட்டோம். மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை.

    இந்த இயக்கம் வருகிற உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அமோக வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை நாம் பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே தொண்டர்கள் சோர்வடையாமல் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். நம்மை விட்டு பிரிந்து சென்ற சகோதரர்கள் இன்னும் ஒரு வாரத்தில் அ.தி.மு.க.வில் சேர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தினகரன் பெற்ற வெற்றி மந்திரத்தாலும், தந்திரத்தாலும் கிடைத்ததாகும். அது நிரந்தரமல்ல. அ.தி.மு.க. வருகிற தேர்தலில் அமோக வெற்றி பெறும். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தமிழகத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றியை பெறுவது உறுதி. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஜெயலலிதாவின் லட்சிய கனவை நிறைவேற்ற உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன் ஆகியோர் தினகரன் பெற்ற வெற்றி தற்காலிகமானது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காட்டும் வழியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். ஆனாலும் அ.தி.மு.க.விற்கு இனி தோல்வி என்பது இல்லை. ஒரு தொகுதியில் சுயேட்சை வெற்றி பெற்றுவிட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என்றனர்.
    Next Story
    ×