என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைந்து செல்ல வசதியாக 108 ஆம்புலன்சில் செயலி அறிமுகம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    விரைந்து செல்ல வசதியாக 108 ஆம்புலன்சில் செயலி அறிமுகம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    விபத்து பற்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக 5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் செயலி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசர கால முதலுதவிக்காக 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 புதிய 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாளமாக, 12 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    108 அவசர கால மைய கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விபத்து பற்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக 5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் செயலியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார்.

    இச்செயலி மூலம் அழைப்பவரின் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்ப உதவும். பொது மக்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


    108 அவசர கால ஊர்திகள், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சென்றடைந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் 75 லட்சம் ரூபாய் செலவில் 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைபேசிகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு கைபேசிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

    இந்த புதிய செயலி மூலம், 108 மையக் கட்டுப்பாட்டு அறையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பெறப்படும் தகவல்கள், அழைப்பவரின் அருகாமையில் உள்ள 108 அவசர கால ஊர்திக்கு பரிமாறப்பட்டு, ஊர்தி ஓட்டுநர் குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவரை சென்றடைய உதவும்.

    இரவு நேரங்களில் வழி கூற யாரும் இல்லாத காலங்களில், இந்த செயலி மூலம் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை ஓட்டுநர் அறிந்து சென்றடைய முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×