search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு புதிய கவர்னர் தீர்வு காண வேண்டும்: திருமாவளவன்
    X

    தமிழகத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு புதிய கவர்னர் தீர்வு காண வேண்டும்: திருமாவளவன்

    தமிழகத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு புதிய கவர்னர் தீர்வு காண வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்கா பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய பொருளதாரத்தை பெருமளவில் சரிய செய்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

    யஷ்வந்த்சின்கா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னணி தலைவர். அவரை போல சுப்பிரமணியசாமியும் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியை சுட்டி காட்டி இருக்கிறார்.

    கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த வருவாய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 8 சதவீதத்திற்கு மேல் இருந்த நாட்டின் மொத்த வருவாய் தற்போது 5.7 சதவீதமாக குறைந்திருக்கிறது.

    உண்மையான புள்ளி விவரங்களை வைத்து மதிப்பிட்டால் அது 3.7 விழுக்காடு அளவில்தான் உள்ளது என சின்கா குறிப்பிட்டுள்ளார். இந்த பொருளாதார வீழ்ச்சியால் நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    எனவே பிரதமர் மோடி நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    யஷ்வந்த்சின்கா, சுப்பிரமணியசாமி, பொருளாதார நிபுணர் அமர்தியா சென் ஆகியோர் முன் வைத்துள்ள விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்.

    டெங்கு காய்ச்சல் மிக வேகமாக தமிழகத்தில் பரவி வருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவாக டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும்.

    நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. என்றாலும் தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தனி வழக்கு தொடுக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது கடமைகளை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

    தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சீர்செய்து அரசியலில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×