என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டால் தேவையில்லாத வழக்குகள் குவியும்: தேர்தல் ஆணைய வக்கீல் வாதம்
    X

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டால் தேவையில்லாத வழக்குகள் குவியும்: தேர்தல் ஆணைய வக்கீல் வாதம்

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை உடனே வெளியிட்டால் தேவையில்லாத வழக்குகள் குவியும் என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் வாதிட்டார்.
    சென்னை:

    மாற்றத்துக்கான இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் நாராயணன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் உள்ளாட்சி தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கவேண்டும். ஆனால், அந்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செயல்படுகிறது’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘உள்ளாட்சி தேர்தலை மே மாதத்துக்குள் நடத்துவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கூறியது.

    பின்னர் ஜூலை 14-ந்தேதிக்குள் நடத்துவதாக இந்த ஐகோர்ட்டுக்கு உத்தரவாதம் அளித்தது. ஆனால், தேர்தல் நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த ஐகோர்ட்டுக்கு தவறான உத்தரவாதங்களை அளித்து, தேர்தல் நடத்தாமல் இழுத்து அடித்து வருகிறது’ என்றார்.

    மேலும் அவர், ‘சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதனால் தேர்தலை நடத்த முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. ஆனால், ஏதாவது ஒரு காரணம் கூறி தேர்தலை தள்ளிப்போடுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விருப்பம் இல்லை’ என்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த வக்கீல் குமார் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து தனி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், கிரிமினல்கள் போட்டியிட தடை விதிக்கும் விதமான விதிமுறைகளை உருவாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது’ என்று வாதிட்டார்.

    அதற்கு மூத்த வக்கீல் வில்சன், ‘கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், மாநில தேர்தல் ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, அவரிடம் நேரடியாக விளக்கம் பெறவேண்டும்’ என்றார்.


    அதற்கு தேர்தல் ஆணையத்தின் மூத்த வக்கீல் பி.குமார், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை உடனே வெளியிட தயாராக இருக்கிறோம். ஆனால், அவ்வாறு அறிவித்தால், தேவையில்லாமல் மேலும் பல புதிய வழக்குகள் இந்த ஐகோர்ட்டில் குவியும். அதனால், அனைத்து விதி முறைகளை பின்பற்றித்தான் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டியதுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஜூலை இறுதிக்குப் பிறகே முடிவெடுக்கப்படும்’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருத்து கூறினார்கள்.

    அப்போது வக்கீல் பழனிமுத்து ஒரு மனுவை தாக்கல் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளில் துணை மேயர் முதல் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பதவி வரை மற்றும் அனைத்து உள்ளாட்சி மன்றங்களில் நிலைக்கு தலைவர் பதவிகளில் மகளிர், எஸ்.சி., எஸ்.டி. உரிய இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்’ என்று ஒரு மனுவை அவர் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர், இந்த வழக்குகள் அனைத்தையும் வருகிற 14-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×