search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி பிறந்த நாள் விழா: படப்பை கரசங்காலில் நாளை மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்டம்
    X

    கருணாநிதி பிறந்த நாள் விழா: படப்பை கரசங்காலில் நாளை மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்டம்

    சட்டமன்ற பணிகளில் வைர விழா காணும் தலைவர் கலைஞரின் 94-வது பிறந்த நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை படப்பை கரசங்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
    சென்னை:

    காஞ்சீபுரம் வடக்கு தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்ற பணிகளில் வைர விழா காணும் தலைவர் கலைஞரின் 94-வது பிறந்த நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (2-ந் தேதி) மாலை 5 மணிக்கு குன்றத்தூர் அருகே உள்ள படப்பை கரசங்காலில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.

    மாநாடு போல் நடைபெற உள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், தீர்மானக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    பொதுக்கூட்டத்திற்காக கரசங்கால் அண்ணா திடலில் பிரம்மாண்ட அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே திரிசூலத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் படப்பை வரை மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் சாலையின் இரு புறமும் கழக கொடி - தோரணங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற தாரக மந்திரத்தை நமக்கெல்லாம் சொல்லித் தந்த காஞ்சி தலைவன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரமாண்டமாக நடைபெறும் இம்மா பெரும் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட முழுவதிலுமிருந்து கழகத்தினர் கரசங்காலே அதிர்ந்திடும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்று சரித்திர சாதனை படைப்போம் வாரீர்! வாரீர்!! அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×