என் மலர்
செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் வருவதற்காக கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஆலந்தூர்:
அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
டெல்லியில் நடக்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான 17-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜெயலலிதா அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய சலுகைகளை அறிவித்து உள்ளது. அவர்கள் நலன் கருதி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வரி விகிதம் குறைக்க எடுத்துரைக்கப்படும்.
தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். அந்த கனவு அவரை தூங்கவிடவில்லை. தூங்காமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் எப்படியாவது முதல்- அமைச்சராக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.
அதனால்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இருக்கிறார். அதில் எந்தவித நியாயமும் இல்லை.
ஏற்கனவே அ.தி.மு.க. அரசின் மீது சட்டசபையில் நம்பிக்கை கோரும் போது சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் செய்த கேலிக்கூத்து மக்கள் அறிந்ததே. திரைப்படத்தில் வரும் வசனத்தை போல ‘‘செவ்வாழைத் தோட்டத்தில் குத்தாட்டம் போடும் குரங்குகள்’’ என்பது போல இருந்தது.
ஜெயலலிதாவின் அரசை கலைக்க வேண்டும் என்று உள்நோக்கத்தோடு செயல்படும் ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எங்களைப் பொறுத்த வரை ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது. இந்த கருத்தை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.






