என் மலர்
அழகுக் குறிப்புகள்
- பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம்.
- எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் சுத்தமாக்கலாம். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.
பச்சை பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும். இந்த காரணத்திற்காக, உங்கள் தோல் பராமரிப்பு தேவைகளுக்கு பச்சை பால் பயன்படுத்த அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை. பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது. அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, நீரேற்றத்தை அதிகரிக்கிறது, சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வயதானதை குறைக்கிறது.
பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் பேக் சரும டோனராக செயல்படுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது, சருமத்தை இறுக்கமாக்குகிறது, சரும தொய்வைத் தடுக்கிறது மற்றும் வயதானதைத் தடுக்கிறது. இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சை பாலில் நான்கு முதல் ஐந்து சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி இந்த கலவையை முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை இரவில் போட்டு விட்டு காலையிலேயும் கழுவலாம்.
காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.
- நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம்.
- இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி.
நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம்.
நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
வீட்டில் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் டையை பயன்படுத்தி வருவதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் உங்கள் கூந்தலை கருமையாக்க முடியும்.
* அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.
* மருதாணி இலையையும் மற்றும் அவுரி இலையையும் தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தலை குளிக்கும் முதல் நாள் இரவே உங்கள் முடிக்கு தகுந்தார் போல் மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து வைத்து விட வேண்டும். சுமார் 6 மணி நேரமாவது இந்த மருதாணி பொடியானது ஊற வேண்டும். பின்பு மறுநாள் காலையில் ஊற வைத்த மருதாணி பொடியை நன்றாக தலைமுடியில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு தலைமுடியை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பை கொண்டு நன்றாக அலசிவிட்டு முடியை நன்றாக உலர்த்த வேண்டும். ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.
தலைமுடி நன்றாக உலர்ந்தவுடன் அவுரி பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உடனடியாக தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் சீயக்காய் போன்று ஏதும் தேய்க்காமல் அப்படியே தலையை நன்றாக அலசி விட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நரைமுடி விரைவில் முழுமையாக கருமுடியாக மாறிவிடும். முதல் முறை பயன்படுத்தினாலே வித்தியாசம் நன்றாகத் தெரியும்.
அவுரி பொடியை தண்ணீரில் கலந்து ஊற வைத்து விட்டால் அதன் தன்மை மாறக்கூடும் எனவே பொடியை தண்ணீரில் கலந்தவுடன் தேய்க்க வேண்டும்.
மருதாணி மற்றும் அவுரி இலைகளை வெயிலில் காய வைக்க கூடாது. நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.
மேலே கூறிய முறைகளை சரியாக செய்தாலே உங்கள் இளநரைக்கு விரைவில் தீர்வு கிட்டும்.
* தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1,
டீ தூள் – இரண்டு ஸ்பூன்,
அவுரி இலை பொடி – 2 ஸ்பூன்.
இரண்டு ஸ்பூன் டீ தூளுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, டீ டிகாஷன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து கொள்ள வேண்டும். பிறகு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு டீ டிக்காஷன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் 2 ஸ்பூன் அவுரி இலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அதன் நிறம் மாறி சற்று பிரவுன் கலராக மாற ஆரம்பிக்கும்.
பயன்படுத்தும் முறை: இதனை பயன்படுத்தும் பொழுது முடியில் எண்ணெய் இருக்கக்கூடாது. முதல் நாளே தலைக்கு குளித்து எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அவுரி இலை பொடி நேரடியாக வெள்ளை முடியில் கருமை நிறத்தைக் கொண்டு வராது. எனவே இந்த பீட்ரூட்டின் சிவப்பு நிறத்தால் முடி சிறிதளவு பிரவுன் நிறமாக மாறும். அதன் பின்னரே அவுரி இலையின் தன்மை முடியுடன் சேர்ந்து கருமை நிறமாக மாற ஆரம்பிக்கும்.
சுத்தமான தலைமுடியில் இந்த அவுரி இலை பேஸ்டடை நன்றாக தடவி விட்டு 1 அல்லது 2 மணி நேரங்கள் அப்படியே ஊற வைத்து, சாதாரண நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு அல்லது சீயக்காய் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்து வர முடியின் நிறம் கருமையாக மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
- கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது.
சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல்வேறு வழிகளில் தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இது பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு சில பொருட்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்துவதால் முகத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
* கிரீன் டீயுடன் சீனி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடைந்துக் காணப்படும்.
* கிரின் டீ தயாரித்து அந்த கலவையை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, கட்டியானதும் முகத்தில் பூசி வரவேண்டும். இதை தினமும் செய்தால் நல்லது.
* கடலை மாவு, கிரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவும்.
* இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கிரீன் டீ பையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் கண்களுக்கு மேல் வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
* சூடான தண்ணீரில் கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
* கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.
கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.
- அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- முல்தானி மிட்டியுடன் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம்.
சரும மினுமினுப்புக்கும் பாதுகாப்பிற்கும் உங்களுக்கு உதவக்கூடிய இயற்கையான பொருட்கள் நிறைய உள்ளன. அதில் ஒன்றான முல்தானி மிட்டி ஒரு இயற்கையான களிமண் மூலப்பொருள் ஆகும். இது அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பண்டைய ஆயுர்வேத மூலிகை மருந்து இயற்கை தாதுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. இது முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பிரச்சனைகள் மற்றும் திறந்த துளைகளை குறைக்க உதவுகிறது. தூள் வடிவ பேஸ்டாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்தை மெதுவாக வெளியேற்றி, மென்மையான, மிருதுவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.
முல்தானி மிட்டியுடன் உங்கள் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம். உங்களுக்கு அழகான சருமத்தை வழங்கக்கூடிய முல்தானி மிட்டி பேஸ் பேக்குகளை பார்க்கலாம்.
1 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூள், 1/4 கப் பால் (அதிக கொழுப்பு), ரோஸ் வாட்டர். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். அதை முகத்தில் தடவவும். இந்த பேஸ் பேக்கை 10-15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்திருக்கவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி சந்தன தூள், 2 தேக்கரண்டி தேங்காய் தண்ணீர், 2 தேக்கரண்டி பால். அனைத்து பொடிகள் மற்றும் திரவங்களை நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். சுத்தமான உங்கள் முகத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் ஈரப்பதமாக்குவதற்கும் இந்த கூலிங் ஃபேஸ் பேக் வேலை செய்கிறது.
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர். அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து, தண்ணீரில் நன்றாக பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை முகப்பரு, பருக்கள் மீது தடவவும். 30-45 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு, இந்த இயற்கையான பேஸ் பேக்கை மாதத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்ய ஸ்பாட் ட்ரீட்மென்ட் பேக்கை பயன்படுத்தலாம்.
1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல். உங்கள் முல்தானி மிட்டியை சம பாகமாக கற்றாழை ஜெல்லுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை சம பாகங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு மென்மையான பேஸ்ட் வரை நன்கு கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவவும். பேக் 10-15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். அனைத்து தோல் வகை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு இந்த ஈரப்பதமூட்டும் மாஸ்க் உதவும்.
- ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு.
- ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும்.
பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.
சருமச் சுருக்கம் : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவிடும். நான்கு ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சருமம் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் சரும சுருக்கங்களை தவிர்த்திடும்.
சருமப் பொலிவு : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
உதடுகள் : உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும். ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.
வெண்மை பற்கள் : கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் சி பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.
தேமல் : சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரிகூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.
நகம் : ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான பயோட்டின் இருக்கிறது. இந்த பயோட்டின் நகம் வளர்ச்சிக்கு மற்றும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான நகத்திற்கு கியாரண்ட்டி!
க்ளன்சர் : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சாலிசைக்ளிக் ஆசிட் சிறந்த பேஷியல் க்ளன்சராக பயன்படும். சாலிசைக்ளிக் ஆசிட் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சருமத்துளைகளை இறுக்கமாக்கிடும். ஸ்ட்ராபெர்ரியை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி லேசகா மசாஜ் செய்திடுங்கள்.
டோனர் : ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பீரசிரில் வைத்திடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அதனை முகத்தில் தேய்த்து வர ஸ்ட்ராபெர்ரி சிறந்த டோனராக செயல்படும்.
ஸ்க்ரப் : ஸ்டாபெர்ரியை அரைத்து அந்த கலவையுடன் பொடித்த ஓட்ஸ் மற்றும் க்ளிசரின் கலந்து பாதம் முழுவதும் மசாஜ் செய்திடுங்கள். பின்னர் சூடான நீரில் 10 காலை வைத்தால் பாதங்களில் உள்ள டெட் செல்கள் நீங்கிடும்.
அடர்த்தியான கூந்தல் : ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்,மெக்னீசியம் மற்றும் காப்பர் இருக்கிறது. இவை எல்லாமே கூந்தலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பத்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் இரண்டு ஸ்பூன் மயோனைஸ் கலந்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்திடுங்கள். அரை மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். இவை தலை முடியை அதிகம் வரண்டுவிடாமல் வைத்திருக்க உதவுவதுடன் முடி உதிர்தலையும் தடுத்திடும்.
பொடுகு : பொடுகுத் தொல்லை அதிகமிருந்தால் ஸ்ட்ராபெர்ரி பழக்கூலுடன் தேயிலை மர எண்ணெய் இரண்டு டீஸ்ப்பூன் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகுத் தொல்லை ஒழிந்திடும், வாரம் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.
- உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
- சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது.
உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் நிறைய பேர் உடற்பயிற்சியை நாடுகிறார்கள். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை. உள் உறுப்புகளுக்கும், சருமத்திற்கும் நலம் பயக்கும். உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதன் மூலம் ஆக்சிஜனை பரப்பி சருமத்தையும் வளப்படுத்தும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்தமுடியும். அதேவேளையில் உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது செய்து முடித்த பிறகோ கைகளை கொண்டு முகத்தை தொடக்கூடாது. குறிப்பாக உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி பயிற்சி செய்யும்போது கைகளில் அழுக்குகள் படிந்திருக்கும். அந்த கைகளால் முகத்தை தொடும்போது சருமத்தில் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு அடிகோலிடும். ஜிம் கருவிகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் படர்ந்தால் முகப்பருக்கள் எளிதாக தோன்றிவிடும். அதனால் எப்போதும் டவல் வைத்துக்கொள்ளுங்கள். வியர்வை வழியும்போது கைகளால் துடைப்பதற்கு பதிலாக டவலை பயன்படுத்துங்கள்.
சரும பராமரிப்பில் முக்கியமான அம்சம், முகத்தை சுத்தப்படுத்துவதாகும். வியர்வை, அழுக்கு, தூசு, இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை சருமத்திற்கு தொல்லை தருபவை. இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி முகத்தை கழுவி வரலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து ஆயில் மற்றும் ஜெல் அடிப்படையிலான கிளீனர்களை பயன்படுத்தலாம். வியர்வை, சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயில் அடிப்படையிலான கிளீன்சர்களை பயன்படுத்தலாம். சாலிசிலிக் அமிலம் கொண்ட ஜெல் அடிப்படையிலான கிளீன்சர், பாக்டீரியாக்களை அகற்றவும், சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவும்.
சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் சிறந்த நண்பனாக மாய்ஸ்சுரைசர் விளங்குகிறது. சருமத்தை அமைதியாக உணர வைப்பதற்கான திறவுகோலாகவும் அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்த பிறகு சருமத்தில் உண்டாகும் அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது. மாய்ஸ்சுரைசர்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்பதால் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தாராளமாக உபயோகிக்கலாம். சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர் வையை ஈடு செய்ய நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம்.
சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். சரும வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுருக்கங்கள், வயதான தோற்ற அறிகுறிகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். கடுமையான புற ஊதாக்கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க எஸ்.பி.எப். தன்மை கொண்ட பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது முக்கியம்.
தண்ணீர் பருகுவது தாகத்தை மட்டும் தணிக்க உதவுவதில்லை. உடலை சுத்தப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தண்ணீர் குடிக்கும்போது உடல் மட்டுமல்ல சருமமும் பயனடைகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியின்போது வியர்வை மூலம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்வது அவசியம். அதனால் உடற்பயிற்சி செய்தபிறகு குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது பருகுவது அவசியமானது.
- 'குர்த்தி' எனப்படும் சல்வார் பெண்கள் விரும்பி அணியும் உடையாகும்.
- எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
'குர்த்தி' எனப்படும் சல்வார், கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் இளம் பெண்கள் மட்டுமில்லாமல், நடுத்தர வயதினரும் விரும்பி அணியும் உடையாகும். இதற்கு பொருத்தமான வகையில் பேண்ட் அணிவது தோற்றத்தை மேம்படுத்தி காட்டுவதோடு, சவுகரியமாகவும் உணர வைக்கும். எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
1 சிகரெட் பேண்ட்: தற்போதைய லேட்டஸ்ட் ஸ்டைல் சிகரெட் பேண்ட்தான் மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர வயதினர் என அனைவருக்கும் பொருத்தமானது. தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். எடை குறைவானது மற்றும் சவுகரியமானது. எல்லாவகை குர்த்திகளுடனும் அணிவதற்கு ஏற்றது.
2 ஸ்கர்ட்ஸ்: குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
3 பளாசோ: இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் இருக்கும் பளாசோ, 'ஸ்ரெய்ட் கட்' குர்த்தியுடன் அணிவதற்கு பொருத்தமாக இருக்கும். குறிப்பாக முழங்காலுக்கு கீழ் நீளும் குர்த்தி அணிந்தால் 'ஸ்டைலிஷ் லுக்' அளிக்கும். உயரமாக இருப்பவர்கள், சிறிய அளவு கிராப் டாப்புடன் இதை அணியலாம். உயரம் குறைவாக இருப்பவர்கள் வெவ்வேறு நிறங்களில் குர்த்தியும், பளாசோவும் அணிந்தால் சற்று உயரமாகத் தெரிவீர்கள்.
4 லெக்கின்ஸ்: இறுக்கமாக காலுடன் ஒட்டி இருந்தாலும், பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பேண்ட் வகை லெக்கின்ஸ். முழு நீள குர்த்தி, அனார்கலி வகை குர்த்தி போன்றவற்றுக்கு லெக்கின்ஸ் பொருந்தும். பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். ஷார்ட் குர்த்தியுடன் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
5 ஜீன்ஸ்: ஜீன்ஸ் உடன் குர்த்தி அணிவது மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடையே வரவேற்பைப் பெற்ற ஸ்டைலாகும். எல்லாவகையான நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏற்ற காம்பினேஷன் இது. ஸ்லிட் கட், ஷார்ட், முழங்கால் நீளம் கொண்டது என எந்த வகை குர்த்திக்கும் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் அல்லது முழு கை கொண்ட குர்த்தியுடன் அணியும்போது, உங்களை உயரமாகக் காண்பிக்கும். ஷார்ட் ஸ்லீவ்லெஸ் குர்த்தியுடன் இது பொருந்தாது.
6 சுடிதார் பேண்ட்: பாரம்பரிய வகையான இது 'கிளாஸிக் லுக்' கொடுக்கக்கூடியது. தினசரி பயன்பாட்டுக்கும், விசேஷங்களுக்கு அணிவதற்கும் பொருத்தமாக இருக்கும். அனார்கலி, முழு கை, காலர் குர்த்தி போன்றவற்றுக்கும் இதை அணியலாம். ஷார்ட் குர்த்தியுடன் அணியக்கூடாது.
7 பட்டியாலா பேண்ட்: ஷார்ட் குர்த்தியுடன் அணியும்போது பாரம்பரியமான தோற்றம் கொடுக்கக்கூடியது பட்டியாலா பேண்ட். சாதாரண உடைக்கும் பொருத்தமாக இருக்கும். எல்லாவகை சீசனுக்கும் அணிவதற்கு சவுகரியமானது பட்டியாலா பேண்ட்.
8 தோதி பேண்ட்: இது ஷார்ட் குர்தியுடன் மட்டும் அணிவதற்கு ஏற்றது. தொடைப் பகுதியில் அதிக பிரில்கள் இருக்கும் என்பதால் சற்று பருமனாக காண்பிக்கும். நீங்கள் அணியும் குர்த்தி எளிமையாக இருந்தால் பேண்ட் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருப்பது தோற்றத்தை அழகாக்கும்.
- காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும்.
காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். எனவே காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது.
காபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும். தினமும் இதை செய்து வந்தால் படிப்படியாக முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் காணலாம்.
ஒரு டீஸ்பூன் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.
கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல் நீங்கி முகம் பொலிவு பெறும்.
கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு முறையை நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.
- உடலில் பித்தம் அதிகமானால், இளநரை ஏற்படும்.
- நெல்லிக்காய் தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 1/2 கப்.
செய்முறை:
நெல்லிக்காய் பவுடருடன், வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். அரை மணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கக் கூடாது.
பலன்கள்:
* உடலில் பித்தம் அதிகமானால், இளநரை ஏற்படும். நெல்லிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மை, சிறுவயதில் ஏற்படும் நரைப் பிரச்னையைப் போக்கும். நெல்லிக் காய் முடியின் கருமை தன்மையைத் தக்கவைப்பதோடு, அடர்த்தியையும் அதிகரிக்கும்.
* நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், செல்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து, முடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அது மட்டுமின்றி இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கனிமச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள், முடியின் வேர்ப்பகுதியை வலிமைப்படுத்தி, தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
* நெல்லிக்காய் தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். தலைமுடிப்பரப்பில் உள்ள பாக்டீரியாவை அழிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால், பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்றவை தடுக்கப்படும்.
- பொடுகு தொல்லை அனைத்து வயதினரையும் பாடாய் படுத்துகிறது.
- பொடுகு பிரச்சனைக்கு சித்த மருத்துவம் நிரந்தர தீர்வை தரும்.
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் கவலை கொள்ளும் விஷயம் பொடுகு தொல்லை. இயற்கை முறையில் பொடுகு தொல்லையை போக்க பல்வேறு சித்த மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* வாதம் அதிகமாக இருந்தால் பொடுகு உண்டாகும். இதனால், முடியின் வேர்ப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். 500 மி.லி தேங்காய் எண்ணெயில் 100 மி.லி அறுகம்புல் சாறு, அதிமதுரம் கலந்து செய்யப்படுவது அறுகன் தைலம். இதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். இது, அனைத்துச் சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
* வேப்பிலையில் வைரஸ், பாக்டீரியா ஒவ்வாமைகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை உள்ளது. வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு, நீர் பாதியாக வற்றும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரைக்கொண்டு வாரம் ஒரு முறை தலை முடியை அலச, பொடுகு, அழுக்கு அனைத்தும் வெளியேறி, தலை சுத்தமாக இருக்கும்.
* கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகைச் சம அளவு எடுத்துக்கொண்டு, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அரைக்க வேண்டும். இதற்கு, 'பஞ்சகல்பம்' என்று பெயர். இதை மிதமான சூடுகொண்ட பசும்பாலில் கலந்து, தலையில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின்னர், சிகைக்காய் போட்டுத் தலைக்குக் குளிக்க வேண்டும். இதனால், பொடுக்குத் தொல்லை நீங்கும். உடல் வெப்பம் தணியும்.
* கசகசா, தேங்காய், பாதாம் பருப்பு, குறைந்த அளவில் சீரகம், மிளகு ஆகியவற்றை இரவு, தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, பாலில் கலந்து தலைக்குத் தடவினால் முடி வறட்சி நீங்கும். பொடுகுத் தொல்லை நீங்கும்.
* ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைக்கவும். இதனுடன், சிறிது ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். அரைத்த விழுதைத் தலைமுடியில் நன்கு பரப்பி, இரண்டு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரைக்கொண்டு, தலையை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால், முடி இயற்கையாகவே, வலிமை அடைவதுடன், அடர்கறுப்பு நிறத்திலும் மிருதுவாகவும் இருக்கும்.
* கறிவேப்பிலை, கருஞ்சீரகம், வெந்தயத்தை சேர்த்து நன்கு அரைத்து விழுதாகிக் கொள்ள வேண்டும். வேப்ப இலைகளையும் சேர்த்துக்கொள்ளவும். இந்த விழுதை வழக்கமாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து உபயோகிக்கலாம். இதை, தலையில் தேய்த்து எட்டு மணி நேரம் கழித்து, ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டுக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் முடி உதிர்வைத் தடுப்பதுடன், தலைமுடியைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம். பொடுகுப் பிரச்னையும் தீரும்.
- வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது.
- வெள்ளரிக்காயை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவழித்து செல்வதை விட, வீட்டிலேயே உட்கார்ந்து பணம் அதிகம் செலவழிக்காமல் வெறும் இயற்கைப் பொருட்களாலேயே சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.
அதிலும் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை முறையாக அழகு நிலையங்களில் பராமரிப்பது போன்றே செய்யலாம். இப்போது வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்பற்றினால், உடனடிப் பலனை பெறலாம்.
வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் முன், முகத்தை நன்கு நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக முகத்திற்கு க்ரீம் போட்டிருந்தால், அதனை முற்றிலும் நீக்கி விட வேண்டும். அதிலும் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்துக் கொண்டு, முகத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கிவிடும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்கின் மூலம் பொலிவான சருமம் பெற வேண்டுமானால், புதினாவை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் புதினாவானது முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். எனவே வெள்ளரிக்காய் மாஸ்க் செய்யும் போது, அத்துடன் புதினாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காயை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனால் மாஸ்க் போடும் போது வசதியாக இருக்கும். குறிப்பாக இத்துடன் புதினா சேர்த்துக் கொள்ளவும். அரைத்த வெள்ளரிக்காயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய் மாஸ்க் தயார் ஆன பின்பு, அதனை முகத்தில் தடவ வேண்டும். ஆனால் கண்களைச் சுற்றி தடவக்கூடாது. ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம். இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர், கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, 25 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.
இந்த மாஸ்க்கை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் போடலாம். இந்தமாஸ்க் சரும ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
- தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம்.
- ஸ்கால்ப் பிரச்சனையை தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:
சீரான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு 'ஸ்கால்ப்' எனப்படும், தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம். ஸ்கால்ப் பகுதியில் மயிர்க்கால்கள், செபேசியஸ் எனும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
இவற்றில் இருந்து உற்பத்தியாகும் வியர்வை மற்றும் எண்ணெய்யுடன் காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும். இதை அவ்வப்போது சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று, தலைமுடி வறட்சி, முடி உதிர்வு, பொடுகு, பேன் தொல்லை, தோல் தடிப்பு, அழற்சி, பூஞ்சைத் தொற்று, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:
'ஸ்கால்ப்' ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'மாஸ்க்' :
மரச்செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெயை மிதமாக சூடுபடுத்தி ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு விரல் நுனியால் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.
1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவவும். பின்னர் ஸ்கால்ப் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும்.
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, 1 முட்டை, ½ கப் தயிர், இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விரல் நுனிகள் மூலம் எடுத்து ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு, சூடான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டை தலையை மூடியவாறு கட்டிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.






