search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    மைசூர் சில்க் சேலைகள்
    X
    மைசூர் சில்க் சேலைகள்

    ரிச்சான தோற்றத்தை தரும் மைசூர் சில்க் சேலைகள்

    மைசூர் சில்க் சேலையில் ஒரிஜினல் பட்டு மற்றும் தூய தங்க ஜரிகை பயன்படுத்தப்படுவதே அதன் தனித்துவமான சிறப்பம்சம் என்று சொல்லலாம்.
    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களின் அணிவகுப்பில் மைசூர் சில்க் சேலைகளும் உள்ளன. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் கைத்தறி தயாரிப்புகளில் ஒன்றான இவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    இவற்றின் துடிப்பான வண்ணம் மற்றும் நுட்பமான வேலைப்பாட்டுடன் மென்மையான துணிகளில் ஒரு ரிச்சான தோற்றத்தை தருவதே மக்கள் பெரிதும் விரும்புவதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

    மைசூர் சில்க் தோற்றமும் வரலாறும்:-

    திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட பொழுதே தோற்றம் பெற்றவை மைசூர் சில்க் சேலைகள். கி.பி. 1785-ல் இருந்தே இவை வளர்ச்சி அடையத் துவங்கின.

    மகாராஜா கிருஷ்ணராஜா வாடியார் ஐவி பிரிட்டிஷ் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டு பட்டுத் துணிகளை விக்டோரியா மகாராணிக்கு அன்பளிப்பாக எடுத்துச் சென்றார். பிறகு ஸ்விட்சர்லாந்திற்குச் சென்று அங்கிருந்து 32 தறி இயந்திரங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தார். அதன் பின்னரே இயந்திரத்தால் மைசூர் பட்டுச் சேலைகளை நெய்வது ஆரம்பமானது என்று வரலாறுகள் கூறுகின்றன.

    1912-ம் ஆண்டு மைசூரை ஆண்ட மகாராஜாவால் பட்டு நெசவுத் தொழிற்சாலையானது நிறுவப்பட்டது. அதுவே இந்தியாவின் மிகப் பழமையான பட்டு உற்பத்தி நிலையமாகும். இந்த தொழிற்சாலையானது இப்பொழுது கர்நாடக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சேலை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் ஒரே குக்கூனிலிருந்து பெறப்படுகின்றன.

    பின்னர் அது பட்டு நெசவுத் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு பட்டு இழைகளின் அடர்த்தி அளவிடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊற வைத்தல், முறுக்குதல், வெப்டிங் மற்றும் வைண்டிங் போன்ற பல படிகளைக் கடந்து நெசவு செய்வதற்கு நூல் தயாராகின்றது. நெசவு செயல்முறையானது டோபி தறி மற்றும் ஐகார்ட் தறி என்ற இரண்டு வகைகளை உள்ளடக்கியது. ஒரு சேலையை நெய்வதற்கு நான்கு மணி நேரம் ஆகும். இதன் பின்னர் டிகம்மிங் எனப்படும் துணியை மென்மையாக்கும் செயலானது ஆரம்பமாகின்றது. இதனை அடுத்து சேலை சாயமிடவும் கழுவவும் அனுப்படுகின்றது.

    மைசூர் சில்க் சேலையில் ஒரிஜினல் பட்டு மற்றும் தூய தங்க ஜரிகை பயன்படுத்தப்படுவதே அதன் தனித்துவமான சிறப்பம்சம் என்று சொல்லலாம். அதனால்தான் மைசூர் பட்டுச்சேலை பார்ப்பதற்கு பணக்காரத் தோற்றத்தை தருகின்றது. உடல் முழுவதும் பிளையின் நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மெல்லிய பார்டர்கள் மற்றும் பெரிய பார்டர்களில் மாங்காய், பூக்கள், அன்னம் மற்றும் பெரிய புட்டாக்கள் போன்றவை மைசூர் பட்டிற்கு மேலும் அழகு சேர்ப்பவையாக உள்ளன.

    கசூத்தி எம்ப்ராய்டரி மற்றும் பாந்தனி டிசைன்களையும் மைசூர் பட்டில் நம்மால் பார்க்க முடியும். ஆரஞ்சு, சிகப்பு, பச்சை, நீலம், காஃபி பிரெளன் மற்றும் லைலாக் நிறங்கள் இந்தச் சேலைக்குப் பெயர் போனவை.

    மைசூர் ஒரிஜினல் பட்டுப் புடவையின் விலையானது இரண்டு இலட்சங்களைத் தொடுகின்றன. அதே சமயத்தில் மூவாயிரத்திலிருந்தும் இவ்வகைச் சேலைகள் விற்கப்படுகின்றன. விலைக்கேற்ற தரத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடிகின்றது.

    விலை அதிகமான மைசூர் பட்டுச் சேலைகளின் ஒரு ஓரத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஒரு தனித்துவமான குறியீட்டை நீங்கள் பார்க்க முடியும். அதில் சேலையின் வரலாறு, உற்பத்தி பற்றிய விவரங்கள், நெசவு செய்வதற்கு செலவிடப்பட்ட நேரம், இதை நெசவு செய்வதற்கு கிடைத்த கூலி போன்றவை இடம் பெற்றிருக்கும். இதை வைத்துக் கொண்டே மைசூர் பட்டில் போலி எது அசல் எது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

    அசல் மைசூர் பட்டை கைகளில் தேய்க்கும் பொழுது கைகளில் வெதுவெதுப்பை உணர முடியும். செயற்கை மற்றும் சின்தடிக் பட்டைத் தேய்க்கும் பொழுது இதுபோன்ற வெதுவெதுப்பை உணர முடியாது. மைசூர் பட்டுச் சேலைகளை துவைக்கும்பொழுது மென்மையான சோப்பைக் கொண்டு சேலையின் ஓரத்தை சிறிதளவு துவைத்து சோதனை செய்த பிறகு கலர் நீங்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு துவைக்கவும்.

    முதல் முறை ட்ரைக்ளன் கொடுப்பது சிறந்ததாகும்.

    சேலைகளை பிரத்தியேகமான பைகளில் வைத்து உபயோகப்படுத்தவும். ஒரே மடிப்பில் வைக்காமல் மாற்றி மாற்றி மடித்து வைக்கவும்.
    Next Story
    ×