என் மலர்
பொது மருத்துவம்
எந்த சர்க்கரை சிறந்தது?
- ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது.
- நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது.
டீ, காபி, ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதாவதொரு பானம் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த பானங்களில் ஏதாவதொரு வகையில் சர்க்கரையின் பங்களிப்பு இருக்கிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன், பிரவுன் சுகர் எனப்படும் பழுப்பு நிற சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது. இதில் எந்த சர்க்கரை நல்லது என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளை சர்க்கரை, புரவுன் சுகர், வெல்லம் இவை எல்லாமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. சுத்திகரிப்பு முறைதான் இதன் தன்மையை நிர்ணயிக்கின்றன. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது பிரவுன் சுகர் அதிகம் சுத்திகரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுடன் ஒப்பிடும்போது வெல்லம் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.
ஆனால் வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகர், வெல்லம் இவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எதை எடுத்துக்கொண்டாலும் அனைத்துமே ஒரே விதமான கலோரிகளைத்தான் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் சுமார் 20 கலோரிகள் வரை இருக்கும். ஒரு டீஸ்பூன் தேனிலும் சுமார் 20 கலோரிகள் இருக்கின்றன.
இருப்பினும் வெள்ளை மற்றும் பழுப்பு நிற சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கும். வெல்லத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவுதான். அதனால் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யாது.
அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேடுபவர்களுக்கு வெல்லம் சிறந்த தேர்வாக அமையும்.
வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகரை பொறுத்தவரை சுவையின் தன்மையில் மாற்றத்தை உணரலாம். சர்க்கரையை உருக வைத்து இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேரமல் சுவையை விரும்புபவர்களுக்கு பிரவுன் சுகர் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளை சர்க்கரையை அனைத்து வகையான இனிப்புகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல.